ஐ.நா.வின் போர்க்குற்றச்சாட்டுகளை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
“இலங்கைப்படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் போலியானவை.
போருக்கு பின்னர் நல்லிணக்கம் தொடர்பில் நியமிக்கப்பட்ட அனைத்து குழுக்களின் ஊடாகவும் இது உறுதியானது. எனவே. ஐ.நா. மனித உரிமை பேரவையின் குற்றச்சாட்டையும் அடியோடு நிராகரிக்கின்றோம்.
மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பதில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உரிய பதிலை கூட்டத்தொடரில் வழங்கியுள்ளார்.
இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளபோதிலும், அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இல்லை, போலியான முறையிலேயே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது உறுதியாகியுள்ளது.
அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளே சுமத்தப்பட்டுள்ளன என்பது உறுதியாகியுள்ளது என மிகவும் தெளிவாக அவர் எடுத்துரைத்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடும் அதுவாகவே இருக்கின்றது.
போருக்கு பின்னர் நல்லிணக்கம் தொடர்பில் குழுக்கள் அமைக்கப்பட்டன, இக்குழுக்கள் ஊடாக கூட மேற்படி படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை” என்றார்.