அரசாங்கம் முன்வைத்துள்ள 20வது திருத்தச் சட்ட வரைவில் உள்ள விடயங்களை மக்கள் அறிந்திருந்தால் 69 லட்சம் மக்கள் எந்த விதத்திலும் தமது பெறுமதியான வாக்குகளை அரசாங்கத்திற்கு வழங்கி இருக்க மாட்டார்கள் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து இன மக்களுக்கு 20வது திருத்தச் சட்டம் குறித்து தெளிவுப்படுத்துவதையே தற்போது செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் நாட்டில் வாழும் அனைத்து மக்களின் சமூக உரிமையும் ஒரு நபரிடம் வழங்கப்பட்டுள்ளது. இது எந்தளவுக்கு நியாயமானது என்பதை மக்கள் பல முறை சிந்தித்து பார்க்க வேண்டும்.
இந்த திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதித் தேர்தல் முடிந்து ஒரு வருடத்திற்குள் ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தை கலைக்க முடியும். அப்படி செய்தால், கடந்த பொதுத் தேர்தலுக்கு அரசு செலவிட்ட மில்லியன் கணக்கான பணம் வீணாகி போய்விடும் எனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 19வது திருத்தச் சட்டத்தில் எந்த தவறுகளையும் தான் காணவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.