கிண்ணியா பிரதேசத்தில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தப்பியோட முயற்சித்த போது விழுந்து காயமடைந்துள்ள நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் நேற்று தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவர் கிண்ணியா- ரஹ்மானியா பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபர் எனவும் தெரியவருகின்றது.
குறித்த சந்தேகநபரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து 52 ஹெரோயின் பெக்கட்டுக்கள் மீட்கப்பட்டதாகவும், அதனுடைய நிறை 2 கிராம் 800 மில்லி கிராம் எனவும் கந்தளாய், சூரியபுர விஷேட பொலிஸ் அதிரடிபடையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சந்தேகநபர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் வீடு திரும்பியதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர் தப்பியோட முயற்சித்த போதும் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையிலேயே திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இன்றைய தினம் விடுவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும், குறித்த சந்தேகநபர் தொடர்பிலான குற்றங்கள் பற்றிய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சூரியபுர பொலிஸ் அதிரடிபடையினர் தெரிவித்துள்ளனர்.