அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் சர்வாதிகார ஆட்சிக்கான பண்புகளே காணப்படுகின்றன. இது எதிர்காலத்தில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். அதனால், 19 ஆவது திருத்தத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொண்டு 19 பிளஸைக் கொண்டு வருவதற்கே அரசு முயற்சிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று 20ஆவது திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கத்தை ஏற்படுத்தும் செயற்திட்டம் இடம்பெற்றது. இதன்போது மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை சுதந்திரம் அடைந்த தினம் தொடக்கம் இதுவரையில் அரசமைப்பு பல்வேறு முறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் 17ஆவது திருத்தம் மற்றும் 19ஆவது திருத்தம் மாத்திரமே ஜனநாயகப் பண்புகளுக்கு முதலிடம் கொடுத்து, மக்களின் நலனை மாத்திரம் கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்ட திருத்தங்கள். ஏனையவை அரசியல்வாதிகளின் நலனைக் கருத்திற்கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 19 ஆவது திருத்ததில் குறைப்பாடுகள் இருக்கின்றன எனவும், அவற்றை நீக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 20 ஆவது திருத்த வரைவை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வருவதற்கும் அரசு தீர்மானித்துள்ளது.
20ஆவது திருத்தத்தில் காணப்படும் சர்வாதிகாரப் பண்புகளைக் கொண்ட ஏற்பாடுகள் தொடர்பில் தற்போது விமர்சனங்கள் தோற்றம் பெற்றுள்ள நிலையில், நீதி அமைச்சர் அலி சப்ரி, கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் இந்தத் திருத்தத்தைத் தாம் தயாரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.