அரசியலமைப்பின் 20வது திருத்த வரைவு இன்று (22) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.
நீதி அமைச்சர் அலி சப்ரி அரசியலமைப்பின் 20 வது திருத்த வரைபை நாடாளுமன்றத்தில் முன்வைக்க உள்ளார்.
திருத்த வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஏழு நாட்களுக்குள், குடிமக்கள் உயர்நீதிமன்றத்தில் வரைபை சவால் செய்யலாம் என்று நாடாளுமன்ற பொதுச்செயலாளர் கூறினார்.
ஏழு நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் யாரும் வரைபை சவால் செய்யாவிட்டால், வரைபின் மீதான இரண்டாவது வாசிப்பு நாடாளுமன்றத்தில் நடைபெறலாம்.
இருப்பினும், யாராவது சவால் செய்தால், மனு தாக்கல் செய்யப்பட்ட 21 நாட்களுக்குள் 20 வது திருத்த வரைபு தொடர்பான தனது தீர்மானத்தை உயர் நீதிமன்றம் வழங்க வேண்டும்.
வரைபின் இரண்டாவது வாசிப்பைத் தொடர்ந்து திருத்தம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவைப் பெற வேண்டும்.
வரைபின் குழு நிலை விவாதத்தின் போது அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தில் எத்தனை மாற்றங்களையும் செய்யலாம்.
குழு நிலை விவாதத்தின் முடிவிற்குப் பிறகு, முன்மொழியப்பட்ட திருத்தம் குறித்து மற்றொரு வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடத்தப்படும்.
மூன்றாவது வாசிப்பு அல்லது குழு நிலை விவாத வாக்கெடுப்பின் போது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே அரசியலமைப்பை திருத்துவதற்கான வரைபு நிறைவேற்றப்படும்.