மறைந்த இந்திய பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டு, மீண்டதன் பின்னரும், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில், நேற்று தனது 74 ஆவது வயதில் மாரடைப்பு மற்றும் சுவாசக் கோளாரினால் அவர் காலமானர்.
இதனையடுத்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
அங்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள். பொதுமக்கள் என பலரும் அவரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
பின்னர் அவரது பூதவுடல் திருவள்ளு}ர் மாவட்டம் தாமரைப்பாக்கத்திலுள்ள பண்ணை வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.
அங்கும் பலர் தமது அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.
தமிழக அரசு அறிவித்தமைக்கு அமைய 72 வேட்டுக்கள் முழங்க அரச மரியாதையுடன் அவரது பூதவுடல் இன்று மதியம் 12 மணியளவில்; தாமரைப்பாக்கத்திலுள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவர் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்பி, மீண்டும் பாடல்களை பாடவேண்டும் என்பது உலகெங்கும் உள்ள அவரின் இரசிகர்களின் பிரார்த்தனையாக இருந்தது.
5 தசாப்தகால இசை வரலாற்றைக் கொண்ட எஸ்.பி பாலசுப்ரமணியம், கடந்த 51 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், காலமானார்.
எஸ்.பி.பி என அறியப்படும் ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் 1946 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 4 ஆம் திகதி, தற்போது ஆந்திர பிரதேசமாக உள்ள சென்னை நெல்லூரில் பிறந்தார்.
1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார்.
பாடகர் என்று மட்டுமல்லாது, இசை அமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர், பின்னணிக் குரல் தருபவர் என எஸ்.பி.பி பன்முக அடையாளத்தைக் கொண்டவராவார்.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எஸ்.பி.பி பாடியுள்ளார்.
அவரின் இசை சேவையை கௌரவித்து, இந்திய அரசு அவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷண் விருதும் வழங்கியது.
ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினையும், பிலிம்பேர் விருதினையும், தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை பெற்றார்.
அவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதினையும் பெற்றிருக்கிறார்.
1981 ஆம் ஆண்டு பெப்ரவரி 8 ஆம் திகதி கர்நாடகா, பெங்களூரில் உள்ள பதிவரங்கில், காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழியில் பாடி அவர் சாதனை படைத்துள்ளார்.
அத்துடன், தமிழ் மொழியில் ஒரே நாளில் 19 பாடல்களையும், ஹிந்தி மொழியில் 6 மணிநேரத்தில் 16 பாடல்களையும் பாடி சாதனை புரிந்துள்ளார்.
பாடும் நிலா எஸ் பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு இசை இரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.