பெண்தான் என நிரூபிக்கும் வரை பளு தூக்கும் வீராங்கனை ஒருவருக்கு விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த பிரபல பளு தூக்கும் வீராங்கனையான Anna Turaeva, தனது வாழ்வில் நடந்த மோசமான அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். 42 வயதான இவர், இதுவரை ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இவர் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் இருந்து கிரஸ்னோதர் பகுதிக்கு விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
இதற்காக விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால், அவர் பார்ப்பதற்கு ஆண் போல் இருப்பதாக கூறி, அவரை அனுமதிக்க மறுத்துள்ளனர். பாஸ்போர்ட்டில் பெண்ணின் புகைப்படம் இருப்பதாகவும், ஆள் மாறி வந்திருப்பதாகவும் கூறி அனுமதிக்க மறுத்துள்ளனர். அதன்பிறகு அனைவரும் சேர்ந்து பேசியதும், இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
அதன்பிறகு அதிகாரிகள் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளனர். இந்த சம்பவத்தால் தான் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும், நிறைய பேர் நின்று இதனை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.



















