கொரோனா கல்வியை முடக்கிபோடலாம் ஆனால் கல்வி கற்கும் ஆர்வத்தை ஒருபோதும் முடக்கிப்போட முடியாது என நிரூபித்து வருகிறார் தொலைதூர மலையோரக் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பல்வேறு துறைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வேடிக்கை பார்த்து வருகிறது. கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் கல்வித்துறையும் கலங்கி நிற்கிறது. பள்ளிகளை பூட்டி, வகுப்பறைகளை மூடி, கொரோனா ஆடிய ஆட்டத்திற்கு அசராமல் தானே ஒரு வகுப்பறையை ஏற்படுத்தி தாமும் பயின்று பிற மாணவர்களுக்கும் கல்வி கற்றுத் தருகிறார் மலைக்கிராமத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி அனாமிகா.
தமிழக கேரள எல்லையான அட்டப்பாடி மலைகிராமத்தைச் சேர்ந்த சுதீர், சஜி தம்பதியினரின் மூத்த மகள் அனாமிகா, திருவனந்தபுரத்தில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் வகுப்பு மூலம், பாடம் நடத்துகிறோம் என அறிவிப்பு வந்தது பள்ளியிலிருந்து.
ஆனால் கூலித் தொழிலாளியான, சுதீரால் தமது மகளுக்கு ஸ்மார்ட் செல்போன் வாங்கிக் கொடுக்க முடியவில்லை. அப்படியே அவர் வாங்கிக்கொடுத்தாலும், தடையில்லா இணைய வசதி அந்த ஊரில் இல்லை. கரண்ட் இல்லை, டி.வி இல்லை என பல்வேறு இல்லைகள் இருந்தாலும் அனாமிகா மனதில் கல்வி கற்கும் ஆர்வம் மட்டும் குறையவில்லை. அந்த பள்ளியில் உள்ள மற்ற குழந்தைகளும் இதே போன்ற சிரமத்தில் இருந்தனர்.
அப்போதுதான் தானோ வகுப்பறை உருவாக்கும் யோசனை தோன்றியது அனாமிகாவிற்கு. தனது தந்தையின் உதவியுடன் இயற்கை எழில் சூழ்ந்த இடத்திற்கு நடுவே குடிசையால் வகுப்பறையை ஏற்படுத்தினார். தன்னைப்போலவே கல்வியை இணைய வழியில் கற்க வசதியில்லாத மாணவர்களை அழைத்து வந்து பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார் அனாமிகா. ஜெர்மனி மொழி உள்ளிட்ட பாடங்களை மலைகிராம பழங்குடியின மாணவர்களுக்கு இவர் கற்றுக் கொடுத்து வருகிறார்.
வகுப்பறைகளுக்கு வரும் மாணவர்களுக்கு சானிடைசைர் கொடுப்பதிலிருந்து, சமூக இடைவெளியை கடை பிடிப்பது வரை, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகளுக்கும் குறைவில்லாமல், வகுப்பறையை நடத்தி வருகிறார். பிற குழந்தைகளோடு சேர்ந்து பள்ளிக்கு சென்று படிக்கிற உணர்வை அனாமிகாவின் வகுப்பறை கொடுப்பதால் அங்கு செல்லும் தனது மகன் படிப்பில் ஆர்வம் செலுத்துவதாகக் கூறுகிறார் அங்கு வரும் ஒரு மாணவனின் தாய். ஸ்மார்ட் வகுப்பறை என்கிற போர்டுடன் காட்சியளிக்கும் அனாமிகாவின் வகுப்பறை அதற்கேற்ப ஸ்மார்ட்டாக காட்சியளிக்கிறது.



















