கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை பெண் பணியாளருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உட்பட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
வேலணை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் ஒருவர் கடந்த 30ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார். அவர் கடந்த 4 நாட்களில் பழகியவர்கள் தொடர்பில் தகவல் பெறப்பட்டு அவர்கள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆடைத்தொழிற்சாலையில் பணி புரியும் மற்றைய பெண் இன்று ஞாயிற்றுக்கிழமையே வீடு திரும்பியுள்ளார். அவரது குடும்பத்தினரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவருடன் தொடர்புடையவர்கள் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் இன்று மாலை பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்படும்.
பரிசோதனையின் அறிக்கை கிடைத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஆடைத்தொழிற்சாலையின் பணியாளர் இருவரும் பேருந்திலேயே புங்குடுதீவுக்கு வருகை தந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.