திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் 16 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு ஜுலை மாதம் 12ஆம் திகதி கிண்ணியா – பெரியாற்றுமுனை பகுதியில் 16 வயது சிறுமி தனிமையாக வீட்டில் இருந்த போது அவரது வீட்டுக்கு அருகிலுள்ள அப்துல் குத்தூஸ் முகமட் அஸ்ரப் என்ற 68 வயதுடைய முதியவர் இறைச்சி காயவைப்பதற்காக தட்டி ஒன்றினை தருமாறு கோரியுள்ளார்.
தட்டி தனது வீட்டில் இல்லை என சிறுமி கூறிய சந்தர்ப்பத்தில் சிறுமியை வீட்டுக்குள் சென்று பார்க்குமாறு கூறி சிறுமி வீட்டுக்குள்ளே சென்றபோது பின்னால் சென்று அவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சிறுமியின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி பாதிக்கப்பட்டமை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் 2019ஆம் ஆண்டு எட்டாம் மாதம் 7ஆம் திகதி இந்த நபருக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றில் குற்றப்பகர்வு பத்திரமொன்றினை தாக்கல் செய்தது.
இந்த நிலையில் இன்று குறித்த வழக்கு திருகோணமலை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டு வாதப் பிரதி வாதங்கள் இடம்பெற்றுள்ளன.
குறித்த சந்தர்ப்பத்திலேயே முதியவர் குற்றவாளி என இனம்காணப்பட்ட நிலையில் அவருக்கான தீர்ப்பு இன்றைய தினம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டப்பட்டது.
இதனடிப்படையில் 16 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும், அப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் ஐந்து வருடகால கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை 25,000 ரூபாய் பணத்தை அரசுக்கு தண்டமாக செலுத்துமாறும் அந்த பணத்தை செலுத்த தவறினால் 6 மாத கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்குமாறும் நீதிபதி கட்டளையிட்டுள்ளார்.