தமிழகத்தில் அதிமுக எம்.எல்.ஏவான பிரபு என்பவர் கோவில் குருக்கள் மகளை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் தனது மகளை கடத்தி சென்றுவிட்டார் என பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினரான அ.பிரபுவுக்கும் (38) சௌந்தர்யா (19) என்ற கல்லூரி மாணவிக்கும் இன்று காலை 5. 40 மணி அளவில் அவரது இல்லத்தில் பெற்றோர்கள் தலைமையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியானது. மேலும் பிரபு தனது காதலியை சாதி மறுப்பு திருமணம் செய்தார் என தமிழக ஊடங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கடத்திச் செல்லப்பட்ட தனது மகளை மீட்டுத் தரும்படி மணப்பெண் சௌந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் கோரியுள்ளார்.
அவர் கூறுகையில், நான் சுவாமிநாதன். தியாகதுருகம் மலையம்மன் கோயிலில் குருக்களாகப் பணியாற்றுகிறேன்.
என்னுடைய மகளை ஆசைவார்த்தைகள் கூறி, அவரை திசைதிருப்பி கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு அவர்கள் 1-ம் திகதி மாலை 4 மணியளவில் கடத்திவிட்டார்.
இது எனக்கும் வேதனையாக உள்ளது, இது தொடர்பாக காவல்துறையிலோ, மாவட்ட ஆட்சியரிடமோ புகார் கொடுக்கச் சென்றால், எனக்கு பொருளாதார பலமும், அதிகார பலமும் இருக்கு. என்னை ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்.
தயவு செய்து அவரை மீட்டுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். கடந்த 10 வருடமாக என்னுடைய மகனைப்போல எங்களுடன் பழகி வந்தவர் பிரபு.
என் மகள் காணாமல் போன பின்னர் பிரபுவுக்கு போன் செய்து, இது சரியில்லை பிரபு. எம்பொண்ணை அனுப்பிடுன்னு கேட்டேன். அதுக்கு, உன் பொண்ணை 10 வருடமாக காதலிக்கிறேன், அப்படில்லாம் அனுப்ப முடியாது என்றார்
38 வயதான ஒருவர் 19 வயது பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளலாமா? நான் எனது உயிரை மாய்த்து கொள்ளப்போகிறேன் என சுவாமிநாதன் கூறினார்.
ஆனால் பொலிசார் பிரபுவின் வீட்டின் அருகில் இருந்த அவரை வந்து அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.