ஹாலிவுட் திரைப்படங்களை மிஞ்சும் வகையிலான கொள்ளை சம்பவம் ஒன்று இந்தியாவில் நடந்துள்ளது.
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் போன்ற திரைப்படங்களில், கார் ஸ்டண்ட் காட்சிகள் அதிகளவு இடம்பெறும். அந்த காட்சிகள் பயம் கலந்த ஆச்சரியத்தை நமக்கு ஏற்படுத்தும். எனினும் அப்படிப்பட்ட ஸ்டண்ட்களை நிஜ வாழ்க்கையில் செய்வது என்பது மிகவும் ஆபத்தானது. ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் திரைப்பட தொடர்களில் இடம்பெற்ற எரிபொருள் திருட்டு காட்சி மிகவும் பிரபலம்.
சினிமாவை மிஞ்சும் சம்பவம்… பைக்கில் இருந்து லாரிக்கு தாவி கொள்ளை… உள்ளே என்ன இருந்தது தெரியுமா?
வேகமாக சென்று கொண்டிருக்கும் லாரியில் இருந்து எரிபொருளை திருடுவதற்காக, காரில் இருந்து அதன் மீது நடிகர்கள் தாவுவார்கள். இந்த காட்சி உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும் என நம்புகிறோம். தற்போது அதே போன்ற தைரியமான ஸ்டண்ட்டை மூன்று பேர் அடங்கிய குழு செய்துள்ளது. மத்திய பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் அந்த காணொளியும் மிக வேகமாக பரவி வருகிறது. வாகன போக்குவரத்து பெரிதாக இல்லாமல் காலியாக இருந்த நெடுஞ்சாலை ஒன்றின் மைய பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. பைக்கில் இருந்து ஒரு நபர், லாரியின் மீது தாவுவதை இந்த காணொளி நமக்கு காட்டுகிறது. அந்த வழியாக வந்த மற்றொரு காரில் இருந்து இந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதன் பின்னர் லாரியின் மீது தாவிய நபர், போல்ட் கட்டர் மூலமாக பூட்டை உடைத்து கன்டெய்னரின் கதவை திறக்கிறார். அவர் மட்டுமல்லாது இன்னும் இரண்டு பேர் பைக்கில் வருவதை இந்த காணொளியில் பார்க்க முடிகிறது. லாரியின் மீது தாவிய நபருக்கு அவர்கள் உதவி செய்கின்றனர். இந்த காட்சிகளை பதிவு செய்த கார், பைக்கிற்கு அருகே வந்ததும், பைக்கில் இருந்த நபர், ஒருவிதமாக சைகை செய்கிறார்.
”உன் வேலையை பார்த்து கொண்டு முன்னால் போ” என்பது போல் அந்த சைகை இருக்கிறது. எனினும் அந்த காரின் ஓட்டுனர் முன்னால் சென்று, கொள்ளை நடக்கிறது என லாரி ஓட்டுனரை எச்சரித்தார். ஆனால் அதன்பின்னர் என்ன நடந்தது? என்பது தெரியவில்லை. இந்த காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, கண்டெய்னரில் இருந்து சமையல் எண்ணெய்யை அவர்கள் திருடியுள்ளனர்.