முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதியூதீன், ஈஸ்டர் ஞாயிறு தாக்கல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனரத்ன வெளியிட்ட கருத்து பொருத்தமற்றது என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சமல் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் சம்பந்தமான விசாரணைகள் முடிந்த பின்னரே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அது குறித்து கருத்து வெளியிட்டிருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல்வாதிகளை போன்று பொலிஸாருக்கும் ஊடக கண்காட்சிகளை நடத்தும் பழக்கம் உள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
ரியாஜ் பதியூதீன் கைது செய்யப்பட்ட போது, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடகங்களிடம் ஒரு கருத்தை வெளியிட்டார்.
ஐந்தரை மாதங்களின் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டவுடன் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், முன்னர் கூறிய கருத்திற்கு முற்றிலும் முரணான கருத்தை வெளியிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சுட்டிக்காட்டிய போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அமைச்சர் சமல் ராஜபக்ச மேலும் கூறுகையில், முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதியூதீன், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் நேரடியாக சம்பந்தப்படவில்லை என்ற காரணத்தினால், அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ரியாஜ் பதியூதீன் விடுதலை செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளரே தவிர சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
இதனடிப்படையில், இந்த சம்பவம் தொடர்பாக எதிர்காலத்தில் மேலும் நபர்கள் கைது செய்யப்படலாம். ரியாஜ் பதியூதீன் மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தால், அவர் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பார்.
ரியாஜ் பதியூதீன் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.