அவுஸ்திரேலியாவின் மெர்பேர்னில் கடந்த ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை மாணவி பலியாகக் காரணமாகவிருந்த நபருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கிளேட்டன் பகுதியில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் 29 ஆம் திகதி இரவு சமிக்ஞை விளக்கில், பாதசாரிகளுக்கான பச்சை விளக்கெரிந்துகொண்டிருக்கும்போது வீதியை கடந்துகொண்டிருந்த இலங்கை மாணவி நிஷாலி பெரேராவை அந்தப்பகுதியால் வேகமாக வந்துகொண்டிருந்த வாகனம் மோதி தூக்கி எறிந்தது. சுமார் 60 மீற்றர் அவர் தூக்கியெறியப்பட்டார். நிஷாலி பெரேரா தலையில் ஏற்பட்ட பலத்த அடிகாரணமாக அந்த இடத்திலேயே இறந்தார்.
நிஷாலி பெரேராவை வாகனத்தினால் மோதிக்கொன்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஷேன் கோக்ரேன் என்ற 37 வயது நபர் விபத்து ஏற்பட்டவுடன் தலைமறைவாகிவிட்ட நிலையில் அவரும் அவருடன் பயணம் செய்த பெண்ணும் சம்பவம் இடம்பெற்று ஐந்து நாட்களுக்கு பின்னர் பொலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான ஷேன் கோக்ரேன், விபத்து இடம்பெற்ற பகுதிக்கான வேகக்கட்டுப்பாட்டை மீறியதுடன் சிக்னலிலும் நிற்காமல் சென்றிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றுவந்தது.
மேலும் ஷேன் கோக்ரேன் பதிவுசெய்யப்படாத காரில் பயணம் செய்திருந்தார் என்பதுடன் கடந்தகாலங்களில் பல்வேறு விதமான குற்றச்செயல்கள் மற்றும் சாலைவிதிமீறல் சம்பவங்கள் தொடர்பில் பொலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார் என நீதிமன்றில் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் குறித்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஷேன் கோக்ரேனுக்கு 10 வருட சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.
இவர் ஆகக்குறைந்தது 8 வருடங்களை சிறையில் செலவிட்ட பின்னரே பரோலில் வெளியே வருவதற்கு விண்ணப்பிக்க முடியும். நீதிமன்ற தீர்ப்பை கேட்டு அவர் கண்ணீர் விட்டார்.
குற்றத்தை இழைத்த நபர் அந்த இடத்திலிருந்து தப்பியோடுவதற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் குறிப்பிட்ட பெண்ணும் தற்போது வழக்கினை எதிர்கொள்கிறார்.
கல்விகற்பதற்காக அவுஸ்திரேலியா வந்த 20 வயதான நிஷாலி பெரேரா அவரது பெற்றோருக்கு ஒரே மகள் என்பது குறிப்பிடத்தக்கது.