போரின் போது பயன்படுத்தப்பட்ட இரசாயனங்களாலும் வேறு பல காரணிகளாலும் வடக்கில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகள் நிவர்த்திக்கப்பட்டு, தேவையான வசதிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஒத்திவைப்பு பிரேரணையின் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நான் இந்த சமயத்தில் யாழ் மாவட்டத்தின் ஒரு பிரச்சினைத் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தலாம் என நினைக்கின்றேன். ஏனென்றால் யுத்தம் காரணமாக வடக்கில் புற்றுநோயாளர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளை விட அதிகமாக காணப்படுகின்றனர்.
போரின் போது பயன்படுத்தப்பட்ட இரசாயனங்களாலும் வேறு பல காரணிகளாலும் அங்கு புற்றுநோயாளர் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. அநுராதபுரம் கொழும்பு போன்ற பகுதிகளுக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக செல்லமுடியாத மக்களுக்கான சிகிச்சை வழங்கும் நிலையமாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை புற்றுநோய்ப் பிரிவே காணப்படுகிறது.
இது வட மாகாண சபையின் அதிகாரத்தின் கீழ் உள்ளது. 70, 80 களில் இந்த வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அங்கு ஆளணி மற்றும் இதர வசதிகளின் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் புற்றுநோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக கொரோனா காலத்தில் அதிகம் பாதிப்புக்குட்படக்கூடியவர்கள் புற்றுநோயாளர்களே எனவே தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலைக்கு உரிய ஆளணி மற்றும் வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
எனினும் மத்திய அரசானது இந்த வைத்தியசாலையை தம் அதிகாரத்தின் கீழ் சுவீகரிக்க முயல்கிறது அதன் மூலம் நிர்வாகத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
இவை உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டு விசேட திட்டங்கள் மூலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு அது தரம் உயர்த்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.