தற்போது இணையம் மற்றும் சமூக வலைத்தள பயன்பாட்டின் ஊடாக கஞ்சா தொடர்பில் சாதாரண மக்கள் மத்தியில் நேர்மறையான அணுகுமுறைகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நபர்கள் செயற்பட்டு வருகின்றமை காணக்கூடியதாக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது உரையாற்றிய அவர்,
“மதுபானம், சிகரெட் மற்றும் போதைப்பொருள் என்பன இன்றளவில் உலகம் முழுவதும் பரவிவரும் ஒரு தொற்றாகும்.
எவ்வாறாயினும் இதுவரை சுகாதார காரணங்கள் மற்றும் பொருளாதார தாக்கத்தை உணர்ந்து கொள்வதன் மூலம் தற்போதைய சமூகம் சிகரெட் பாவனையிலிருந்து ஒதுங்கி காணப்படுவது மகிழ்ச்சியான விடயம்.
புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகாரசபை உள்ளிட்ட தரப்பினரின் நீண்டகால முயற்சியின் பலனாக இன்றளவில் சிகரெட் பாவனை குறைந்துள்ளமையை சமூகத்தில் காணக்கூடியதாக உள்ளது.
சிகரெட் விற்பனை வீழ்ச்சியடைந்தமை தொடர்பில் சான்றுகள் இருப்பினும், அதற்கு உள்நாட்டு மட்டத்தில் சிகரெட்டிற்கு பதிலாக மாற்று உற்பத்தி தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இதுவரை அறியப்படாததுடன், கஞ்சாவினை அதற்கான சிறந்ததொரு மாற்றீடாக தெரிவுசெய்வது தொடர்பாகவும் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
எனினும், தற்போது இணையம் மற்றும் சமூக வலைத்தள பயன்பாட்டின் ஊடாக கஞ்சா தொடர்பில் சாதாரண மக்கள் மத்தியில் நேர்மறையான அணுகுமுறைகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நபர்கள் செயற்பட்டு வருகின்றமை காணக்கூடியதாக உள்ளது.
கஞ்சாவினை சட்டபூர்வமாக்குவதற்கு எந்தவொரு நிறுவனத்திற்கும் இடமளிக்கப்படவில்லை. பல்வேறு நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மருத்துவ நடவடிக்கைகளுக்காக கஞ்சா வளர்ப்பிற்கும், இறக்குமதி செய்வதற்கும் கோரியுள்ளனர்.
அதற்கு மேலதிகமாக ஆயுர்வேத திணைக்களத்தின் ஊடாகவும் அவர்களுக்கு தேவையான உள்நாட்டு ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பிற்கு உரிய தரத்துடனான கஞ்சா பெற்றுக் கொள்வதற்கு அதனை வளர்ப்பதற்கு அனுமதி கோரியுள்ளனர்.
அதனால், 1984ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க ஆபத்தான ஒளடத கட்டுப்பாட்டு தேசிய சபை சட்டத்தின் 8ஆவது பிரிவிற்கமைய இலங்கையில் கஞ்சா செடி வளர்ப்பு மற்றும் அது தொடர்பான உற்பத்திகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு மற்றும் அதன் மோசமான தாக்கங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நிபுணர் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் கல்விசார் வேலைத்திட்டங்களை பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், பணியிடங்கள் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க சமூக குழுக்களுக்கு விழிப்பூட்டும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதுடன், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களுக்கான விழிப்புணர்வு செயல்திட்டங்களும் இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என்றார்.