கொரோனா சிகிச்சைக்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவரது நடவடிக்கைகள் கவலை அளிப்பதாக இஸ்ரேல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று தொடர்பாக இஸ்ரேல் அரசின் ஆலோசகராக செயல்பட்டு வருபவர் டாக்டர் ரோனி காம்சு.
இவரே தற்போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நடவடிக்கைகள் சரியல்ல என கவலை தெரிவித்துள்ளவர்.
வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ரோனி காம்சு, உண்மையில் அமெரிக்க ஜனாதிபதி குறித்து கவலையாக இருக்கிறது என்றார்.
மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருக்கும் ஒருவர், தமது ஆதரவாளர்களை சந்திக்க வெளியே செல்வது என்பது எந்தவகையான மன நிலை என்றே புரியவில்லை என குறிப்பிட்டுள்ள அவர்,
இது மக்களுக்கு தவறான ஒரு செய்தியை அளிக்காதா? இது சுகாதார பணியாளர்களை அவமதிக்கும் செயல் அல்லவா? இது கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை ஏளனம் செய்வதல்லவா?
மொத்தத்தில், இதுபோன்ற ஒரு செயல், கண்டிப்பாக ஒரு உயர் பதவியில் இருக்கும் நபரில் இருந்து எதிர்பார்க்க கூடாது.
மட்டுமின்றி, டிரம்ப் மருத்துவமனையில் இருந்து வெள்ளை மாளிகை திரும்பிய பிறகும், தமது ஆதரவாளர்களை சந்திக்க மாஸ்க் இல்லாமல் சென்றதும் கடும் விமர்சனங்களுக்கு இலக்கானது.
இதனிடையே, அமெரிக்க பாராளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி, ஜனாதிபதி டிரம்பின் உளவியல் தகுதி குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
மட்டுமின்றி, ஜனாதிபதி டிரம்பின் உடல் நலம் தொடர்பில் வெள்ளை மாளிகை ஒளிவு மறைவற்ற வெளிப்படைத்தன்மையை பெலோசி கோரியிருந்தார்.
மேலும், தமது உடல் நலன் தொடர்பில் ஜனாதிபதி டிரம்ப் மேலதிக தகவல்களை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.