வெடுக்குநாரி மலை ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸாரால் வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நிர்வாகத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நெடுங்கேணி வெடுக்குநாரி மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என தெரிவித்து ஆலயத்தில் பொது மக்கள் வழிபடுவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில் பொது மக்களின் முயற்சியால் வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
எனினும் ஆலய வளாகத்தில் கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்கும், பூசை வழிபாடுகளை முன்னெடுப்பதற்கும் நெடுங்கேணி பொலிஸாரால் தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டு வந்தது.
கடந்த வாரம் ஆலயத்தின் பூசாரியை நெடுங்கேணி பொலிஸார் விசாரணைக்காக அழைத்ததுடன், ஆலய வளாகத்திற்குள் சென்று பூசை நிகழ்வுகளை மேற்கொண்டால் கைது செய்வோம் என தெரிவித்திருந்ததுடன், தொல்பொருட்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த வழக்கு வவுனியா நீதிமன்றில் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ஆலயத்தின் சார்பில் தலைவர் சசிகுமார், செயலாளர் தமிழ்செல்வன், பூசகர் மதிமுகராசா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
இதன்போது நீதிமன்றில் ஆஜராகியிருந்த பொலிஸார் ஆலய நிர்வாகத்தினரை கைது செய்ய வேண்டும் என்றும், தொல்பொருள் சார்ந்த விடயம் என்பதால் வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை ஆலய நிர்வாகத்தினரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்றும் நீதவானிடம் கோரப்பட்டது.
இதற்கு ஆலயத்தின் நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் கடுமையான எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தது.
தெற்கிலும் ருவன் வெலிசாய போன்ற பல்வேறு பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்தின் கீழே தான் இருக்கிறது. எனினும் அங்கும் வழிபாடுகள் இடம்பெறுகின்றமையையும், நீதவானுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இதன் நிமித்தம் 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் ஆலய நிர்வாகத்தினர் விடுவிக்கப்பட்டதுடன், இம்மாதம் 23 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த விடயத்திற்கு நீதிமன்றங்களின் ஊடாக தீர்வினை பெறுவது என்பது கல்லிலே நார் உரிப்பதற்கு ஒப்பானது. இவற்றிற்கு அரசியல் ரீதியாகவே முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சட்டத்தரணி சுகாஸ் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆலயத்தின் நிர்வாகத்தினர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி சிற்றம்பலம் தலைமையில் 15 ற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.