அர்மீனியா-அஜர்பைஜான் இடையே கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வந்த சண்டை, முடிவுக்கு வந்துள்ளது.
நாகோர்னோ-காராபாக் எனும் மலைப்பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அர்மீனியா-அஜர்பைஜான் இடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்னை நீடித்து வருகிறது. நாகோர்னோ-காராபாக் பகுதி அஜர்பைஜானுக்கு சொந்தமானது என்றாலும், அர்மீனிய இனத்தவர்களே அதனை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த பிரச்னை கடந்த 3 வாரங்களுக்கு முன்பு மீண்டும் ஆயுத மோதலாக உருவெடுத்தது. அர்மீனியா-அஜர்பைஜான் படைகள் கடுமையாக மோதிக்கொண்டன. இரு தரப்பும் துப்பாக்கிச்சூடு, வெடிகுண்டு வீச்சு என நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இதனிடையே, உலக நாடுகள் எடுத்த முயற்சியின் பலனாக அர்மீனியா-அஜர்பைஜான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பகுதியில் கிடக்கும் உடல்களை ஒப்படைப்பது, கைதிகளை விடுவிப்பது என இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் (Sergei Lavrov) தெரிவித்துள்ளார்.