திருச்சியில், 4 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய காவலரின் மகன் கைது செய்யப்பட்டார்.
திருச்சி புதிய காவலர் குடியிருப்பை சேர்ந்த ஆயுதப்படை காவலர் மகாலிங்கம். இவரது மகன் கார்த்தி என்பவர், உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த சுமதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு இருவரும் திருச்சி திருவரம்பூர் பாலாஜி நகரில் வசித்து வந்துள்ளனர். எலக்ட்ரானிக் கடையில் மேலாளராக பணியாற்றி வந்த கார்த்தியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த சுமதி, அவரது செல்போனை எடுத்துப் பார்த்துள்ளார். அப்போது, அதில் கார்த்தி பல பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இருந்துள்ளன. இதுகுறித்து கார்த்தியிடம் கேட்டபோது, ஏற்கனவே திருச்சியைச் சேர்ந்த ஸ்டெல்லா, சென்னையை சேர்ந்த வானி மற்றும் நீலா உள்ளிட்ட 3 பேரை திருமணம் செய்து கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், அவர்களுக்கு குழந்தை இருப்பதையும் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சுமதி, லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து விசாரணை நடத்திய போலீசார் கார்த்தியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.