சிவகங்கை மாவட்டத்தில், கிரிக்கெட் விளையாடச் சென்ற இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை, மானாமதுரை குலாளர் தெருவைச் சேர்ந்த சுந்தர் என்பவரின் மகன் உதயமூர்த்தி. இவர் தனது நண்பர்களோடு வைகை ஆற்றில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மழை பெய்யத் தொடங்கியதால், உதயமூர்த்தி வீட்டிற்குத் திரும்பியுள்ளார். செல்லும் வழியில் அவர் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதில், உதயமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மின்னல் தாக்கியதில், அவருடன் சென்ற மேலும் 5 இளைஞர்களும் கீழே விழுந்துள்ளனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.