முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் மீது பாலியல் புகார் கூறிய சட்டக்கல்லூரி மாணவி நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியபோது, சின்மயானந்த் மீது எந்தவிதமான குற்றச்சாட்டையும் கூறவில்லை என்று திடீர் பல்டி அடித்தது அனைவருக்கும அதிர்ச்சியளித்தது.
மத்திய அமைச்சராக இருந்த சின்மயானந்த் நடத்தும் ஷாஜகான்பூர் சட்டக் கல்லூரியில் படித்து வந்த மாணவரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி திடீரென மாயமானார். அந்தப் பெண் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட வீடியோவில் தன்னை சாந்த் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர் பாலியல்ரீதியாக துன்புறுத்துகிறார் வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டுகிறார் எனத் தெரிவித்திருந்தார்.
அந்த பெண்ணின் தந்தை போலீஸில் அளித்த புகாரில், தனது மகளுக்கு மத்திய அமைச்சர் சின்மயானந்த் பாலியல் தொந்தரவு அளித்தார் என்று புகார் அளித்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி போலீஸார் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்து சின்மயானந்த் மீது ஐபிசி –376, 354, 342, 506 ஆகிய பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து 20-ம் தேதி கைது செய்தனர்.
இதற்கிடையே, புகார் அளித்த பெண் ரூ.5 கோடி கேட்டு சின்மயானந்தாவை மிரட்டினால் என்று சின்மயானந்த் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் அந்த மாணவியும், அவருடன் சேர்ந்த 3 நண்பர்களும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரிக்க உத்தரப்பிரதேச அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. அந்த விசாரணைக் குழுவினர் கடந்த நவம்பர் மாதம் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். அதில் சின்மயானந்த் மீது பாலியல் குற்றச்சாட்டையும், அந்தப் பெண்ணின் மீது மிரட்டல் குற்றச்சாட்டையும் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அலகாபாத் உயர் நீதிமன்றம் புகார் அளித்திருந்த மாணவிக்கு ஜாமீன் அளித்து. சின்மயனாந்தாவுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கு ஷாஜாகான்பூர் நீதிமன்றத்திலிருந்து லக்னோ எம்பி. எம்எல்ஏ நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்த பிப்ரவரி 3-ம் தேதி அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், எம்பி, எம்எல்ஏக்களை விசாரித்துவரும் லக்னோ நீதிமன்றத்தில் நேற்று அந்த மாணவி ஆஜராகினார். அப்போது, தான் சின்மயனாந்த் மீது எந்தவிதமான குற்றச்சாட்டையும் கூறவில்லை என்று கூறி, தான் முன்பு கூறிய குற்றச்சாட்டையும் மறுத்தார்.
இதையடுத்து, உடனடியாக அரசு தரப்பு வழக்கறிஞர், அந்த பெண் பிறழ் சாட்சியாக மாறிவிட்டார் என்பதால், சிஆர்பிசி 340ன் கீழ் நடவடிக்கை கோரி மனுத்தாக்கல் செய்ய அனுமதி கோரினார். இதையடுத்து, நீதிபதி பி.கே.ராய் அனுமதியளித்ததையடுத்து, அந்த பெண்ணுக்கு எதிராக பிறழ்சாட்சி மனு அரச தரப்பில் தொடரப்பட்டது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ராய், மனுவின் நகலை குற்றம்சாட்டப்பட்டவருக்கும், அந்த பெண்ணுக்கும் வழங்கக் கோரி வழக்கை வரும் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.