பூமிக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக கடற்பாசியில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கையாக பிளாஸ்டிக்கை பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது.
உலக வெப்பமயமாதலால் ஏற்கனவே பூமியில் பெரும் பருவநிலை மாற்ற பாதிப்புகளை ஏற்பட்டுவரும் நிலையில் தற்போது சுற்றுச்சூழல் மாசுபாடு என்பதும் புவிக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்தாக மாறியுள்ளது. இந்த சுற்றுச்சூழல் மாசுபாடுகளுக்கு முக்கிய காரணமாக மனிதனால்
உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் உருவெடுத்துள்ளன. ஆர்டிக் முதல்அண்டார்டிகா வரை நிரம்பியுள்ள இந்த பிளாஸ்டிக் கழிவுகள் கடல்வாழ் உயிரினங்கள் மட்டும் மனித வாழ்வுக்கு பெரும் கேடு விளைவித்து வருகிறது.
இருப்பினும் மனிதனின் அன்றாட வாழ்கையில் பிளாஸ்டிக் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. தண்ணீர் பாட்டில்கள் தொடங்கி பெருட்களை சுமந்து செல்லும் பைகள் முதற்கொண்டு பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படுகின்றன. ஒரு ஆண்டுக்கு சராசரியாக 30 கோடி டன் பிளாஸ்டிக் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த பிளாஸ்டிக்குகள் மண்ணில் மக்க பல நூறு ஆண்டுகள் ஆகும் என்பதால் இது இயற்கைக்கு பெரும் கேடாக இருந்துவருகிறது.
இதனை தொடர்ந்து ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் பிரிட்டனை சேர்ந்த நோட்லா என்ற நிறுவனம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக கடற்பாசிகளில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கையான பிளாஸ்டிக்கை கண்டுபிடித்துள்ளது. பொதுவாக மனிதனால் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்குவதற்கு பல ஆண்டுகள் எடுக்கும் என்றால் இந்த இயற்கையான பிளாஸ்டிக் 4 முதல் 6 வாரங்களில் மக்கும் தன்மை கொண்டவை.
கடற்பாசிகளை சேகரித்து உலரவைத்து பொடியாக்கும் இந்த நிறுவனம் தங்கள் வேதிப் பொருட்களின் மூலம் அதனை பிளாஸ்டிக் ஆக மாற்றுகின்றன. ஐந்தாண்டுகளுக்கு முன்பு கடற்பாசியால் தயாரிக்கப்பட்ட உண்ணக்கூடிய நீர் பந்துகளை (edible water pods) இந்த நிறுவனம் தயாரித்தது. இதனை லண்டனில் நடைபெற்ற மாரத்தான் போட்டியின் போது போட்டியில் கலந்துகொண்ட வீரர்களுக்கு வழங்கியது.
தற்போது அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கடற்பாசிகள் மூலம் தயாரிக்கப்படும் இந்த இயற்கையான பிளாஸ்டிக்கை நோட்லா நிறுவனம் உருவாக்குகிறது. அந்த உணவுப் பொருட்களை போடக்கூடிய இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை நோட்லா நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கவர்களை சாதரண பிளாஸ்டிக் கவர்களை போலவே தேவை முடிந்தவுடன் அகற்றி விடலாம். ஆனால் இந்த இயற்கை பிளாஸ்டிக் கவர்கள் விரைவில் மக்கும் தன்மை வாய்ந்தவை.
சூழலுக்கு உகந்த வகையில் இருக்கும் இந்த கடற்பாசிகள் வளர்வதற்கு நிலமோ நேரமோ தேவையில்லை என நோட்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கடற்பாசிகள் ஒரு நாளைக்கு ஒரு மீட்டர் வரை வளரக்கூடியவை. இதற்கு உரம் போட தேவையில்லை அதேபோல் தண்ணீரும் தேவையில்லை. இதை வைத்து அதிக நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என அந்நிறுவனத்தில் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாங்கள் பிளாஸ்டிக்கை இயற்கைப் பொருளாக மாற்றும் வேளைகளில் ஈடுபடுகிறோம். எனவே நாங்கள் இயற்கையாக தயாரிக்கும் இந்த பொருட்களும் பழங்கள் காய்கறிகளை போலவே இயற்கையாகவே மக்கிவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.