வக்ரமாகும் புதனின் இந்த பெயர்ச்சியால் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிகமான பிரச்சனைகள் ஏற்படப் போகின்றன.
பொதுவாக புதனின் வக்ர பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் ஒருவித பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
எனவே இப்போது புதன் வக்ர பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்கும் எந்த மாதிரியான தாக்கம் இருக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது மற்றும் 6 ஆவது வீட்டின் அதிபதி புதன். இந்த பெயர்ச்சியின் போது புதன் இந்த ராசியின் ஏழாவது வீட்டில் நுழைகிறார். ஏழாவது வீடு என்பது திருமண வாழ்க்கை, மனைவி, மற்ற துறையில் உள்ள கூட்டணியைக் குறிக்கிறது. புதனின் வக்ர பெயர்ச்சியால், இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு ஏற்படக்கூடும்.
கூட்டணி கொண்டு தொழில் புரிபவர்கள், கூட்டாளிகளுடன் நல்ல தொடர்பு வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான வாக்குவாதம் ஏற்படக்கூடும். காதலிப்பவர்களுக்கு, காதலில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
உங்களுக்கு இடையே உள்ள அனைத்து பிரச்சனைகளையும் பேசி தீர்த்துக் கொண்டால், நெருக்கம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமல் விலகி இருப்பது நல்லது. பயணம் செய்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும். ஆனால் அந்த பயணத்தைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் லாபத்தை இழந்துவிடுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியில் புதனின் வக்ர பெயர்ச்சி ஆறாவது வீட்டில் நிகழ்கிறது. ஆறாவது வீடு வாழ்வின் போராட்டங்களைக் குறிக்கிறது. ஜோதிடத்தில் இந்த வீட்டை எதிரிகளின் வீடு என்று கூறுவர்.
சண்டை சச்சரவுகளை சந்திக்க நேரிடலாம். எந்த பிரச்சனைனைக்கும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண முயலுங்கள். உங்கள் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது கவனமாக இருங்கள். இந்த காலத்தில் பண பரிவர்த்தனைகளை செய்யாமல் இருப்பது நல்லது. பணத்தை செலவழிக்கும் போது கவனமாக இருங்கள். ஏனெனில் திடீரென்று உங்கள் குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியத்திற்கான பணத்தை செலவிட வேண்டியிருக்கும். இது நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும்.
யாருக்கேனும் கடன் கொடுத்திருந்தால், அதைத் திரும்ப பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. உங்கள் ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. தினமும் யோகா, உடற்பயிற்சி செய்து, மனதை அமைதியாக வைத்திருங்கள்.
மிதுனம்
புதன் வக்ர பெயர்ச்சி மிதுன ராசியில் 5 ஆவது வீட்டில் நிகழ்கிறது. இந்த வீடு காதல், குழந்தைகள், படைப்பாற்றல், கல்வி, புதிய வாய்ப்புக்கள் போன்றவற்றைக் குறிக்கிறது. இந்த பெயர்ச்சியால் உங்கள் எண்ணங்கள் மீதுள்ள நம்பிக்கையின்மையை உணர்வீர்கள்.
இது உங்களுக்கு கவனக்குறைவை உண்டாக்கும். எந்த ஒரு வேலையையும் முடிக்க வழக்கத்தை விட அதிக நேரம் ஆகும். உங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
இந்த பெயர்ச்சியால் உங்களின் நம்பிக்கை மற்றும் படைப்புத்திறன் அதிகரிப்பதைக் காண்பீர்கள். திருமணமாகாதவர்கள், இப்போது புதிய உறவில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.
கடகம்
கடக ராசியில் புதன் வக்ர பெயர்ச்சியானது அமைதியான வீடு என்று அழைக்கப்படும் 4 ஆவது வீட்டில் நிகழ்கிறது. இந்த வீடு சந்தோஷம், அசையும் மற்றும் அசையா சொத்து, புகழ் மற்றும் உணர்ச்சிகளைக் குறிக்கிறது. இதனால் இந்த வக்ர பெயர்ச்சியால், இந்த ராசிக்காரர்கள் வீட்டிற்காக செலவு செய்வார்கள்.
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க செலவழிப்பீர்கள். இருப்பினும் செய்யும் செலவுகளில் கவனமாக இருங்கள். இல்லாவிட்டால் நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும். உங்கள் தாய் நோயால் அவஸ்தைப்படலாம். எனவே அடிக்கடி அவர்களை கவனித்து உதவுங்கள்.
பயணம் செய்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கும். குறிப்பாக வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் பற்றி பேசும் போது, சுவாசம் சம்பந்தமாக பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே ஆரம்பத்திலேயே உங்கள் உணவுகளில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். இதனால் விரைவில் குணமாவீர்கள்.
சிம்மம்
புதன் வக்ர பெயர்ச்சி சிம்ம ராசியின் மூன்றாவது வீட்டில் நிகழ்கிறது. இந்த வீடு தைரியம், ஆசை, உடன்பிறப்புகள், ஆற்றல், ஆர்வம், உற்சாகம் போன்றவற்றைக் குறிக்கக்கூடியது.
புதன் வக்ர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான முடிவுகளைத் தரப்போகிறது. உங்கள் உடன்பிறப்புகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
இந்த பெயர்ச்சியால் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் இந்த பயணம் உங்களுக்கு நன்மை அளிப்பவையாக இருக்கும்.
அதோடு இந்த பயணம் உங்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் வழங்கும். புதனின் வக்ர நிலை உங்களை கடினமாக உழைக்க வைக்கும். உங்கள் உடன் பணிபுரிபவர்களுடன் பேசும் போது கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசுங்கள். இல்லாவிட்டால் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கன்னி
கன்னி ராசியில் புதன் வக்ர பெயர்ச்சி 2 ஆவது வீட்டில் நிகழ்கிறது. இந்த வீடு கல்வி, செல்வம், குடும்பம் போன்றவற்றைக் குறிக்கிறது.
புதனின் வக்ர பெயச்சி இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களைத் தரப்போகிறது. அதில் முக்கியமாக இவர்கள் செல்வத்தை பல வழியில் சேமிப்பார்கள். தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு, இந்த காலம் மிகவும் நல்ல காலமாகும். எதிர்பார்க்கும் பணத்தை சம்பாதிப்பீர்கள்.
இந்த பெயர்ச்சியால் நீங்கள் அதிக செலவுகளை செய்ய வேண்டியிருந்தாலும், அது உங்கள் நிதி நிலையை பாதிக்காது. குடும்பத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. இதனால் வீட்டின் நிலைமை சற்று மோசமாக இருக்கும். குடும்பத்துடன் அமர்ந்து பேசுவதன் மூலம், பிரச்சனைகளை ஓரளவு கட்டுப்படுத்தலாம். ஆரோக்கியம் பற்றி கூற வேண்டுமானால், சற்று சிரமத்தை சந்திக்கக்கூடும். உணவுப் பழக்கத்தை மாற்றாவிட்டால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பீர்கள். முடிந்தவரை காய்கறிகளை அதிகம் சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
துலாம்
துலாம் ராசியில் புதன் வக்ர பெயர்ச்சி முதல் வீட்டில் நிகழ்கிறது. இந்த வீடு ஆளுமையின் வீடாக கூறப்படுகிறது. புதனின் வக்ர பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. இவர் அதிர்ஷ்டசாலிகாக இருப்பார்கள். எந்த வேலையையும் நன்கு புரிந்து கொண்ட பின்னரே செய்வீர்கள்.
வேலை செய்யும் இடத்தில் பல வெற்றிகளைப் பெறுவீர்கள். இந்த பெயர்ச்சியால் புதன் உங்களை மிகவும் மென்மையானவராக மற்றும் உணர்ச்சிகரமானவராக மாற்றுவார். இதனால் உங்கள் குடும்ப மற்றும் தொழிவ் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
வீட்டில் உள்ள பெரியோர்களிடம் எதையும் ஆலோசித்தால், உங்களால் எளிதில் முடிவுகளை எடுக்க முடியும். பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. குறிப்பாக வெளிநாட்டு பயணங்களால் உங்களுக்கு லாபம் கிட்டும்.
விருச்சிகம்
புதன் வக்ர பெயர்ச்சி விருச்சிக ராசியில் 12 ஆவது வீட்டில் நடைபெறுகிறது. இந்த வீடு செலவு, வெளிநாட்டு பயணம், இழப்பு போன்றவற்றை குறிப்பிடுகிறது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வக்ர பெயர்ச்சி சாதகமற்ற முடிவுகளைத் தரக்கூடியதாக இருக்கும்.
இந்த காலத்தில் உடல்நல பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும். இதனால் நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயணங்களைத் தவிர்ப்பதே நல்லது. இல்லாவிட்டால் இழப்பை தான் சந்திப்பீர்கள்.
அலுவலகத்தில் எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தளவு யாருடனும் சண்டை போடாதீர்கள். யோகா, தியானம் போன்ற உடற்பயிற்சிகளை செய்யுங்கள். இதனால் உங்கள் மன அழுத்தம் குறையும்.
தனுசு
தனுசு ராசியின் புதன் வக்ர பெயர்ச்சி 11 ஆவது வீட்டில் நடைபெறுகிறது. இந்த வீடு வருமானம், சாதனைகள், நண்பர்கள், மூத்த சகோதர சகோதரிகளைக் குறிக்கிறது.
புதனின் இந்த வக்ர பெயர்ச்சி நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும். உங்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இது உங்கள் அந்தஸ்தை சமூகத்தில் உயர்த்தும். கடின உழைப்பினால் அலுவலகத்தில் பாராட்டு கிடைப்பதோடு, பதவி உயர்வும் கிடைக்கும்.
இடமாற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு, அது கிடைக்கும். பழைய நெருங்கிய நண்பர்களை சந்திப்பீர்கள். அவர்களால் புதிய வணிகம் அல்லது புதிய முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மகரம்
மகரத்தில் புதன் வக்ர பெயர்ச்சி 10 ஆவது வீட்டில் நிகழ்கிறது. இந்த வீடு தந்தையின் தொழில், அஸ்தஸ்து, அரசியல் மற்றும் இலக்குகளைக் குறிக்கிறது. சொல்லப்போனால் இந்த புதன் வக்ர பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்த்தை அளிக்கப் போகிறது.
உங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். அதே சமயம் அனைத்து பணிகளிலும் வெற்றிகளைக் காண்பீர்கள். உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். எப்பேற்பட்ட தடைகளையும் சமாளித்து எளிதில் வெல்வீர்கள்.
உங்கள் வேலைத்திறன் அதிகரிக்கும். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். குறிப்பாக வணிகத்தில் நல்ல லாபத்தை ஈட்ட பல வாய்ப்புக்கள் கிடைக்கும். உங்கள் தந்தையுடனான உறவு மேம்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியில் புதன் வக்ர பெயர்ச்சி 9 ஆவது வீட்டில் நிகழ்கிறது. இந்த வீடு ஒருவரின் தலைவிதி, பயணம், ஆன்மீக நாட்டம், கொள்கைகள் போன்றவற்றைக் குறிக்கிறது. புதன் வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள்.
பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். புதன் வக்ர நிலையால் ஆன்மீக பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இது உங்கள் மனதிற்கு அமைதியை அளிக்கும். காதலிப்பவர்கள், தங்கள் காதலை அழகாக வெளிப்படுத்துவீர்கள்.
இது இருவருக்கும் உள்ளான காதல் மற்றும் உறவை அதிகரிக்கும். உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள்.
மீனம்
புதன் வக்ர பெயர்ச்சி மீன ராசியின் 8 ஆவது வீட்டில் நிகழ்கிறது. இந்த வீடு ஏற்றத்தாழ்வுகள், மர்மம், ஆராய்ச்சி, திடீர் நிகழ்வுகள், வயது போன்றவற்றைக் குறிக்கிறது.
இந்த புதன் வக்ர பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு வழக்கத்தை விட சற்று குறைவான பலன்களையே அளிக்கும்.
இந்த பெயர்ச்சியால் தாய்க்கு உடல்நலம் பாதிக்கப்படும். இது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையிலும் ஏற்றத்தாழ்வுகளைக் காணக்கூடும். கூட்டணி வைத்து தொழில் தொடங்குவதற்கு இது சிறந்த காலம் அல்ல.
வாகனம் ஓட்டும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பெயர்ச்சி காலத்தில் வயிறு சம்பந்தமாக பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும். உங்கள் உணவுகளில் கவனம் செலுத்துவதோடு, யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்வது நல்லது.