கொரோனா பாதிக்கப்பட்ட 30% குழந்தைகளுக்கு கர்ப்பப்பையிலோ அல்லது பிரசவத்தின் போதோ தாயிடமிருந்தோ வைரஸ் பாதிப்பு பரவியிருப்பது பிரான்ஸில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் பெரியவர்கள் முதல் பிறந்த குழந்தைகள் வரை அனைவருக்கும் பரவி வருகிறது. இந்நிலையில் பிரான்ஸில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கொரோனா பாதிக்கப்பட்ட 30% குழந்தைகளில் கர்ப்பப்பையில் இருக்கும்போதோ அல்லது பிரசவத்தின் போது தாயிடமிருந்தோ வைரஸ் பரவியிருப்பது தெரியவந்துள்ளது.
பெரும்பாலான குழந்தைகள் பிரசவத்திற்கு பிறகு கொரோனாவில் இருந்து தப்பியிருந்தாலும் சில குழந்தைகள் கற்பப்பையில் இருக்கும் போது தாயினால் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. சுமார் 176 குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குழந்தைகள் அனைத்தும் ஒரு முறையாவது கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதும் சில குழந்தைகள் நோய் எதிர்ப்பு திறனுடனும் இருந்தது தெரியவந்துள்ளது.
இதில் 70 சதவீதம் குழந்தைகள் மருத்துவமனையில் தனது தாய், மருத்துவர்கள், செவிலியர்கள், பார்வையாளார்கள் மூலம் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் மீதமுள்ள 30% குழந்தைகள் கர்ப்பப்பையில் இருக்கும்போதோ அல்லது பிரசவத்தின் போது தாயிடமிருந்தோ வைரஸ் பரவியிருப்பதாக தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 50% அறிகுறிகள் அற்றவர்களாக இருந்தனர்.
50% குழந்தைகள் அறிகுறியற்றவர்கள்:
மொத்தம் ஆய்வு செய்யப்பட்ட 176 குழந்தைகளில் 50 குழந்தைகளுக்கு எந்த ஒரு அறிகுறியுமின்றி வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 64 சதவீதம் குழந்தைகளுக்கு நுரையீரல் பிரச்சனை 52 சதவீதம் குழந்தைகளுக்கு சுவாசப்பிரச்சனையும் 44 சதவீதம் குழந்தைகளுக்கு காய்ச்சல் 36 சதவீத குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு வாந்தியெடுத்தல் பிரச்சனைகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதவிர புதிதாக பிறந்த 18 சதவீதம் குழந்தைகளுக்கு மட்டும் எரிச்சல் ,சோம்பல் நரம்பியல் பிரச்சனைகளை உருவாக்கியது. இதனால் குழந்தைகளின் கை, கால்கள் நெழிந்ததாகவும் கடினமானதாகவும் மாறியது தெரியவந்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டால் தாய்ப்பால் கொடுப்பதில் பிரச்சனை உள்ளதா?
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் இருந்த கூடுதல் ஆபத்து எதுவும் மருத்துவர்கள் கண்டுபிடிக்கவில்லை. இருப்பினும் சில நாட்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.