கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக மக்கள் அனைவரும் தங்கள் இயல்புக்கு சற்றும் பொருந்தாத முககவசங்களை அணிந்து வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்த குழந்தை ஒன்று மருத்துவரின் முககவசத்தை இழுப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்துக்கு முன்பு இயல்பாக உலகம் இருந்ததோடு மக்களும் சுந்தந்திரமாக வாழ்ந்து வந்தனர். டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக மக்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்டுள்ளது. மக்கள் கூட்டங்கள் நிரம்பு வழியும் கடை வீதிகளும் வணிக வளாகங்களும் இன்று வெறிச்சோடி காணப்படுகிறது.
சுற்றுலா தலங்களில் மகிழ்ச்சியாக விடுமுறையை கழித்த மக்களை தற்போது அங்கு காண்பது அறிதாக உள்ளது. அனைத்து மக்களும் பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வேற்றுகிரக வாசிகள் போல தங்களுக்கு சற்றும் பொருந்தாத முககவசங்களுடன் வீதிகளில் வளம் வருகின்றனர். தோழில் கைப்போட்டுக்கொண்டு வீதிகளில் சுற்றித்திரிந்த இளைஞர்கள் தற்போது சமூக இடைவெளியை பின்பற்றுகின்றனர்.
வெறும் 10 மாதங்களில் நடந்த இந்த மாற்றத்தை விரும்பாத மக்கள் எப்போது இயல்புநிலை திரும்பும் என வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த நிலை விரைவில் மாறும் மீண்டும் இயல்பு நிலை திரும்பும் என்பதை உணர்த்தும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்த குழந்தை ஒன்று அழுதபடி மருத்துவரின் முககவசத்தை பிடித்து இழுத்துள்ளது. இதனை புகைப்படமாக பதிவு செய்த மருத்துவர் அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இது தற்போது உலகம் முழுவதும் இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்த புகைப்படத்துக்கு கமெண்ட் செய்யும் மக்கள் அனைவரும் தொற்றுநோயை வென்று விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் நம்பிக்கை வாசகங்களை வெளியிட்டு வருகின்றனர்..