ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து பிரிட்டன் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக வைரஸ் பாதிப்புகளுக்கு உள்ள நாடுகளாக ஐரோப்பிய நாடுகள் இருந்தன. அங்கு பிப்ரவரி மாதங்களில் வேகமாக பரவிய பாதிப்பு இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ், உள்ளிட்ட நாடுகளை நிலைகுலையச்செய்தது. இதனை அடுத்து அந்நாடுகள் மேற்கொண்ட துரித கொரோனா பரிசோதனை மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக மே மாதத்துக்கு மேல் அங்கு படிப்படியாக வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியது. இதன் காரணமாக கடந்த ஜூன் மாதம் முதல் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தின. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர்.
இந்நிலையில் சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் அலை வீசி வருவதால் அங்கு வைரஸ் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பிரான்ஸ் நாட்டில் கடந்த 10 ஆம் தேதி மட்டும் சுமார் 27,000 கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. தலைநகர் பாரிஸ் உட்பட லில்லி, லியோன், மார்சேய், துலூஸ் உள்ளிட்ட பல நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நான்கு வாரங்களுக்கு ஊரடங்கு நடைமுறைகள் அமலில் இருக்கும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவின் இரண்டாம் அலை நாட்டில் பரவி வருவதாகவும் நாம் கட்டுபாட்டை இழக்கவில்லை இருப்பினும் கவலைப்படக்கூடிய சூழ்நிலையில் இருக்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார். இதுவரை பிரான்ஸில் மட்டும் 7 லட்சத்து 56 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 32,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல் இங்கிலாந்து, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளிலும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.