நவராத்திரி விரத வழிபாடு புரட்டாசி அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கி தசமி வரை அனுஸ்டிக்கப்படுகிறது.
அம்மனை சக்தி வடிவமாக இச்சா, கிரியா, ஞான சக்தி என மூன்று சக்திகளாக வழிபடுகின்றோம்.
நவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும் மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்று மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே இவ்விரதத்தின் நோக்கமாகும்.
அந்தவகையில் தற்போது இவ்விரதத்தினை எப்படி கடைப்பிடிக்கலாம் என பார்ப்போம்.
விரதம் இருக்கும் முறை
- முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி பராசக்தியை வழிபடுதல் வேண்டும். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி மஹாலட்சுமியை வழிபடவேண்டும்.
- இறுதி மூன்று நாட்களும் கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டிச் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.
- சுமங்கலிப் பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் என்பவற்றை வழங்குவர்.
- நவராத்திரி காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகுதல் விலக்கப்பட்டுள்ளது. ஊசிநூல்கொண்டு தைத்தலும் கூடாது.
- புரட்டாசி சனி விரதம் இந்த நவராத்திரி நாட்களில் வரும்போது எண்ணெய் தேய்க்காது நீராடி அந்த விரதத்தையும் கைகொள்ளலாம். எண்ணெய் எரித்து வழிபடுதலும் செய்யலாம்.
- நவராத்திரி விரதத்தை முறையாகக் கைக்கொள்ள விரும்புவோர் முதலெட்டு நாட்களிலும் பகலில் உணவின்றி இரவில் பூஜை முடித்தபின் பால்பழம், பலகாரம் என்பவற்றை உண்டு, நவமியில் உபவாசமிருந்து பத்தாம் நாள் விஜயதசமியன்று காலை எட்டரை மணிக்கு முன் பாரணை செய்தல் வேண்டும்.
- முடியாதவர்கள் முதலெட்டு நாளிலும் ஒரு நேர உணவுண்டு, கடைசி நாளில் பால் பழம் மட்டும் கொள்ளலாம்.