பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்த செய்தி ஒன்றை சிங்கள இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இல்லங்கள் இரண்டு கிடைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் அவருக்கு விஜேராம பிரதேசத்தில் உள்ள உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லாமாக அலரி மாளிகை கிடைத்துள்ளது.
அலரி மாளிகையில் தங்கியிருந்த பிரதமர் அண்மையில் மீண்டும் விஜேராம பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். தற்போது அலரி மாளிகையில் பிரதமரின் கடைசி மகனான ரோஹித ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வசித்து வருகின்றனர்.
ரோஹித மற்றும் அவரது மனைவி தங்கள் இரண்டாவது குழந்தைக்காக காத்திருக்கின்றமையினால் மனைவி தரப்பு குடும்ப உறுப்பினர்களும் அலரி மாளிகையில் தங்கியிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
எப்படியிருப்பினும் இந்த விடயம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தெரியவந்தவுடன், அலரி மாளிகையில் இருந்து வெளியேறி விஜேராம இல்லத்திற்கு செல்லுமாறு ரோஹித ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
நாட்டின் பிரதமர் பயன்படுத்துவதற்காக வழங்கப்படும் அலரி மாளிகையில் பிரதமர் தங்கவில்லை என்றால் அங்கு வேறு குடும்பம் தங்குவது பிரச்சினைக்குரிய விடயம் என்பதனால் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு செல்லுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு கிடைத்த உத்தியோகபூர்வ இல்லத்தை பயன்படுத்தாமல் மிரிஹானவில் உள்ள தனது தனிப்பட்ட வீட்டிலேயே தங்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.