கிங்ஸ் லெவன் பஞ்சாப் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் டிரா ஆன நிலையில் இரண்டாவது சூப்பர் ஓவரில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பஞ்சாப் அணி.
ஐபிஎல் தொடரின் 36-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி துடுப்பாட்டம் தெரிவு செய்தது. துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் டி காக் ஆகியோர் களமிறங்கினர், இந்த ஜோடியில் ரோகித் சர்மா சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் (0) ரன் ஏதும் எடுக்காமலும், இஷான் கிஷான் 7(7) ஓட்டங்களும், அடுத்து களமிறங்கி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்ணால் பாண்ட்யா 34(30) ஓட்டங்களும் எடுத்து வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா ஏமாற்றமளித்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடி தனது அரைசதத்தை பதிவு செய்த டி காக் 53(43) ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார்.
அதிரடி காட்டிய பொல்லார்டு 34(12), கெளல்டர் நைல் 24(12) கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முடிவில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து 177 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும் கே.எல் ராகுலும் களம் இறங்கினர்.
மயங்க் அகர்வால் சொற்ப ஓட்டங்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். 3-ஆம் விக்கெட்டிற்கு களம் இறங்கிய கெய்ல் (21 பந்துகளில் 24 ஓட்டங்கள்) அதிர்ச்சி அளித்தார்.
எனினும் கே.எல் ராகுல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிகோலஸ் பூரான் (12 பந்துகளில் 24 ஓட்டங்கள் ) எடுத்து ஆட்டமிழந்தார்.
51 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் உள்பட 77 ஓட்டங்கள் சேர்த்த கே.எல் ராகுல், பும்ரா பந்தில் போல்டு ஆகி ஆட்டம் இழந்தார். இதையடுத்து ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், 8 ஓட்டங்கள் மட்டுமே பஞ்சாப் அணி எடுத்தது. இதனால், ஆட்டம் சமன் ஆனது.
இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி பும்ராவின் துல்லிய பந்து வீச்சால் ஓட்டங்களை சேர்க்க முடியாமல் திணறியது.
2 விக்கெட்டுகளை இழந்து வெறும் 5 ஓட்டங்களை மட்டுமே பஞ்சாப் அணி சூப்பர் ஓவரில் சேர்த்தது. இதையடுத்து, 6 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர் ஓவரில் களமிறங்கிய மும்பை அணியும் தடுமாறியது.
ரோகித் சர்மா – டிகாக் கூட்டணி 5 ஓட்டங்களை மட்டுமே சூப்பர் ஓவரில் சேர்த்தது. இதனால், மீண்டும் ஆட்டம் சமன் ஆனது.
இதையடுத்து, வெற்றியை தீர்மானிக்க 2-வது முறையாக சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணியில் பொல்லார்டும் பாண்ட்யாவும் களம் இறங்கினர்.
மும்பை அணி சூப்பர் ஓவரில் 11 ஓட்டங்களை சேர்த்தது. இதையடுத்து, 12 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.
மும்பை அணி சார்பில் பவுல்ட் சூப்பர் ஓவரை வீசினார். பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயிலும் மயங்க் அகர்வாலும் களம் இறங்கினர்.
முதல் பந்தை எதிர்கொண்ட கிறிஸ் கெயில் சிக்சருக்கு விளாசினார். 2-வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 3 வது மற்றும் 4 பந்தில் பவுண்டரியை விளாசிய மயங்க் அகர்வால் பஞ்சாப் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.