ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டி டை ஆன நிலையில், சூப்பர் ஓவரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், இயான் மோர்கனின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், வார்னரின் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
அதன் படி நாணய சுழற்ச்சியில் வென்ற, சன்ரைசர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஷுப்மான் கில், ராகுல் திரிபாதி ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர்.
இந்த ஜோடி 6 ஓவரில் 48 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், ராகுல் திரிபாதி 23 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஷுப்மான் கில் 36 ஓட்டங்களும், நிதிஷ் ராணா 29 ஓட்டங்களிலும் வெளியேற, அடுத்து வந்த அந்த்ரே ரஸல் 11 பந்தில் 9 ஓட்டங்கள் அடித்து ஏமாற்றம் அளிக்க கொல்கத்தா அணி 15 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 105 ஓட்டங்கள் எடுத்து தடுமாறியது.
5-வது விக்கெட்டுக்கு மோர்கன் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியதால், கொல்கத்தா அணியின் ரன் விகித ஜெட் வேகத்தில் எகிறியது.
இதனால் கொல்கத்தா 150 ஓட்டங்களை கடக்க, கடைசி ஓவரில் 16 ஓட்டங்கள் என இறுதியாக கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்கள் எடுத்தது.
மோர்கன் 23 பந்தில் 34 ஓட்டங்கள் அடித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 14 பந்தில் தலா 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 29 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
164 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக, ஜானி பேர்ஸ்டோவுடன், கேன் வில்லியம்சன் களமிறங்கினார். டேவிட் வார்னர் நடுவரிசை பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.
புதிய துவக்க ஆட்டக்காரர்கள் என்றாலும் இருவரும் அதிரடியான தொடக்கத்தையே தந்தனர். இருவருமே அதிரடி காட்டியதால் பவர் பிளே முடிவில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 58 ஓட்டங்கள் குவித்தது.
இதையடுத்து பெர்குசன் பந்து வீச்சில் வில்லியம்சன் 19 பந்துகளில், 29 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
தொடர்ச்சியாக 3-வது வீரராகக் களமிறங்கி வந்த மணீஷ் பாண்டே, இந்த முறை களமிறங்கவில்லை. அவருக்குப் பதில் பிரியம் கர்க் முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். அவரும் 4 ஓட்டங்கல் மட்டுமே எடுத்த நிலையில் பெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தார். 4-வது வீரராக கேப்டன் வார்னர் களமிறங்கினார்.
இதுவரை பொறுப்பாக விளையாடி வந்த பேர்ஸ்டோவும் அடுத்த ஓவரிலேயே 36 ஓட்டங்களுக்குள் வருண் சக்கரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, 5-வது வீரராக மணீஷ் பாண்டே களமிறங்கினார். இவரையும் சிறப்பான யார்க்கர் பந்து மூலம் ஆட்டமிழக்கச் செய்தார் பெர்குசன். விஜய் சங்கரும் சோபிக்காமல் 7 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தார்.
இதனால், ஹைதராபாத் அணி 109 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அப்போது ஹைதராபாத் வெற்றிக்கு 29 பந்துகளில் 55 ஓட்டங்கள் தேவைப்பட்டன.
இதையடுத்து, வார்னருடன் இணைந்த அப்துல் சமத் அதிரடி காட்டி விளையாடினார். எனினும் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசியதால் ஓவருக்கு 1 பவுண்டரிக்கு மேல் கிடைக்காமல் பெரிய ஓவராக மாறவில்லை. இதனால், கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டன.
மவி வீசிய அந்த ஓவரில் 2 பவுண்டரிகள் கிடைத்தாலும் சமத் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 15 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்தார்.
கடைசி ஓவரில் ஹைதராபாத் வெற்றிக்கு 18 ஓட்டங்கள் தேவைப்பட்டன. ரஸல் வீசினார். முதல் பந்தை ரஷித் கான் எதிர்கொண்டார். அந்த பந்து நோ-பாலாக வீசப்பட 1 ஓட்டம் கிடைத்தது.
அடுத்த பந்தில் ரஷித் கான் பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனாலும், ப்ரீ ஹிட் என்பதால் 1 ஓட்டம் கிடைத்தது. கடைசி 5 பந்துகளில் 16 ஓட்டங்கள் தேவைப்பட்டன. அடுத்த 3 பந்துகளில் வார்னர் ஹாட்ரிக் பவுண்டரி அடிக்க கடைசி 2 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்டன. 5-வது பந்தில் 2 ரன்களும், கடைசி பந்தில் 1 ரன்னும் எடுக்க ஆட்டம் சமனில் முடிந்ததால், சூப்பர் ஓவர் தீர்மானிக்கப்பட்டது.
அதன் படி ஹைதராபாத் அணிக்கு, துவக்க வீராக களமிறங்கிய வார்னர் பெர்குசன் பந்து வீச்சில் போல்டாக, அடுத்து வந்த சமத்தும், போல்டாகியதால், ஹைதராபாத் அணி வெறும் 2 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து ஆடிய கொல்கத்தா அணி 3 ஓட்டங்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.