இளம் பெண் கிராம உத்தியோகத்தருக்கு, தொலைபேசி ஊடாக தகாத வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தியதாக கூறப்படும் கற்பிட்டி பிரதேச செயலாளர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 4ஆம் திகதி கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கீழ் கடமைபுரியும் இளம் பெண் கிராம சேவகர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதேச செயலாளர், தகாத வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தியதாக குறித்த பெண் கிராம உத்தியோகத்தர் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாட்டு செய்திருந்தார்.
இதனையடுத்து நேற்றையதினம் குறித்த பிரதேச செயலாளர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட கற்பிட்டி பிரதேச செயலாளர், புத்தளம் மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர் 3 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த பிரதேச செயலாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு புத்தளம் மாவட்டச் செயலகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் புத்தளம் மாவட்ட உப தலைவர் திலங்க சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேற்படி சம்பவம் தொடர்பில் குறித்த பிரதேச செயலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் பணிப்பகிஷ்பை முன்னெடுக்கப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.