இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டாம் ஆண்டு படிக்கும் சிறுவன் மீது பட்டாசு கொழுத்திய சம்பவம் நிவித்திகல பிரதேசத்தில் இடம்பெறுள்ளது.
இச் சம்பவம், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதோடு, சந்தேக நபரை பொலிஸார் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு குடும்பத்தினருக்கிடையில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்ந்துள்ள நிலையில், பழிவாங்கல் திட்டமானது ஒன்றுமறியாத சிறுவன் மீது கொடூரமாய் தீர்க்கப்பட்டுள்ளது.
குறித்த இரு குடும்பத்தில், பக்கத்து கடை முதலாளியே ஏழு வயது சிறுவனின் உடலில் பட்டாசு கொழுத்தி போட்டுள்ளார். சிறுவனின் முகம் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு காயமடைந்தச் சிறுவன் நிவித்திகலை பிங்கந்த தோட்ட பிரிவை சேர்ந்த தமிழ் பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி கற்கும் மாணவன் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி சம்பவத்தில் மேலும் தெரிய வருவதாவது,
குறித்த சிறுவன் காலை 9.00 மணியளவில் சந்தேகநபரின் கடை முன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தவேளை சந்தேகநபரான கடை முதலாளி சிறுவன் மீது பட்டாசு கொழுத்தி போட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தினத்தில் சிறுவனின் தந்தை தனது தேவைக்காக கொழும்புக்கு சென்றதாகவும், சிறுவனின் தாய் வேலைக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, சிறுவன் மீது பட்டாசு கொழுத்திய நபர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை பொலிஸார் வலை வீசி தேடி வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.