கோழிக்கூட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பு அங்கிருந்த 4 நாட்டுக் கோழிக்குஞ்சுகளை விழுங்கிய நிலையில், வீட்டின் உரிமையாளருக்குப் பேரதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.
தேனி அருகே அல்லிநகரம் காவல் நிலையத்துக்குப் பின்புறம் வசித்து வருபவர் செல்வம். இவர் தனது வீட்டில் 30க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார். சமீப காலமாக இவருடைய வீட்டில் வளர்த்து வரும் கோழிக்குஞ்சுகள் மாயமாகி வந்தன.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் மாயமாகின. அக்கம் பக்கத்தில் தேடியும் கோழிக்குஞ்சுகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதே நேரத்தில் திருடி விட்டுச் சென்ற தடமும் அங்கு இல்லை. இதனால் ஒன்றும் புரியாமல் அவர் குழப்பத்திலிருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் செல்வம் தனது கோழிக் குஞ்சுகள் மற்றும் சண்டை சேவல்களைக் கூண்டுகளில் அடைத்து வைத்து விட்டுச் சென்று விட்டார்.
இந்த சூழ்நிலையில் நேற்று காலையில் ஒரு கூண்டுக்குள் இருந்து கோழிகள் கடுமையாகச் சத்தம் போட்டன. இதைக் கேட்ட செல்வம் உடனே கூண்டைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.
கூண்டிற்குள் இருந்த நாகப்பாம்பு கோழிக்குஞ்சுகளை விழுங்கிக்கொண்டு இருந்தது. அந்த கூண்டுக்குள் 6 கோழிக் குஞ்சுகள், ஒரு கோழி, ஒரு சண்டை சேவல் ஆகியவை இருந்தன.
இதில், ஒரு கோழிக் குஞ்சு, பாம்பு கூண்டுக்குள் நுழைந்த ஓட்டை வழியாக வெளியேறி உயிர் தப்பியது.
4 கோழிக்குஞ்சுகளைப் பாம்பு விழுங்கி விட்டது. அதே நேரத்தில் ஆசை ஆசையாக வளர்த்த சண்டை சேவல் பாம்பு கடிதத்தில் உயிரிழந்து கிடந்தது, செல்வத்திற்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இதையடுத்து அவர் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான கண்ணன் என்பவருக்குத் தகவல் கொடுத்து, குறித்த 7 அடி நாகப்பாம்பினை பிடித்துச்செல்லப்பட்டு, தேனி வீரப்ப அய்யனார் கோவில் மலைப்பகுதியில் உள்ள அடர்ந்த பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டுள்ளது.