விமானத்தில் ஏற இருந்த பெண் பயணிகளை நிர்வாணமாக்கி சோதனை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கத்தார் நாட்டில் உள்ள விமான நிலைய கழிப்பறையைச் சுத்தம் செய்யும் பணிகளில் அங்குள்ள பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு கழிப்பறையிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே கழிப்பறையை பணியாளர்கள் திறந்து பார்த்த நிலையில், அவர்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்குப் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று இருந்தது. உடனே அந்த குழந்தையை மீட்ட பணியாளர்கள், விமான நிலைய மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார்கள்.
சம்பவ இடத்திற்கு வந்த ஹமாத் விமான நிலைய அதிகாரிகள் அந்த குழந்தை யாருடையது என விசாரணை மேற்கொண்டார்கள். பின்னர் அங்கிருந்த 13 ஆஸ்திரேலியர்கள் உட்படப் பெண் பயணிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். மேலும் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நிர்வாண சோதனைக்கு உட்படுத்தியுள்ளார்கள். இதில் அதிர்ச்சி என்னவென்றால் நிர்வாண சோதனைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களிடம் எதற்குச் சோதனை செய்யப்படுகிறது என்பது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
இந்த விவகாரம் ஆஸ்திரேலியாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அரசு தனது கண்டனங்களையும், அதிருப்தியையும் கத்தார் அரசிடம் பதிவு செய்துள்ளது. இருப்பினும் நடந்த சம்பவம் தொடர்பாக கத்தார் விமானச் சேவை நிறுவனம் இதுவரை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் அந்த குழந்தைக்குச் சிறப்பான கவனிப்பு அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.