சீனாவுடன் கடும் முறுகல் நிலையில், பீஜிங்குக்கு எதிராகக் கடும் வாசகங்களில் அடங்கிய குறிப்பு ஒன்றை வெளியிட்டபடி அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ நேற்று கொழும்பு வந்து சேர்ந்துள்ளார்.
அவர் இன்று கொழும்பு வருவதற்கு முன்னர் தமது ருவிட்டர் பக்கத்தில் சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியால் பெரும் அச்சுறுத்தல் என்ற குறிப்பை அவர் வெளியிட்டிருந்தார்.
இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ கொழும்புக்கு வரமுன்னர், நேற்றுமுன் தினம் அது குறித்து கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் வெளியிட்ட பகிரங்க அறிக்கையில், இலங்கைக்குத் தேவையற்ற பிரச்சினைகளைக் கொண்டு வரவேண்டாம் எனக் குறிப்பிட்டிருந்தது.
அமெரிக்காவைக் கடுமையாகக் கண்டித்து சீண்டும் விதத்தில் அந்த அறிக்கை வெளியாகியிருந்தது.
இலங்கையை ஒட்டி அமெரிக்க,சீனப் பனிப்போர் ஒன்று கட்டவிழும் சூழ்நிலையை அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் கொழும்பு வருகை ஏற்படுத்தியுள்ளது.
தாம் கொழும்பு வந்து சேர்வதற்கு முன்னர் தாம் வெளியிட்ட ருவிட்டர் குறிப்பில்,
“சீன கம்யூனிஸ்ட் கட்சி தான் நிஜத்தில் பெரும் அச்சுறுத்தல். சர்வதேச அரங்கில் மற்றைய நாடுகளை எவ்வாறு ஈடுபாடு காட்ட வேண்டும் என நாம் கோருகின்றமோ அதே மாதிரித்தான் சீனாவும் செயற்பட வேண்டும் எனக் கோருகின்றோம் என்று சாரப்பட தெரிவித்திருந்தார்.
இலங்கையைத் தளமாக,களமாகக் கொண்டு அமெரிக்க,சீன கருத்து மோதல் பகிரங்க வெளிப்பாடாக வெடித்திருக்கின்றமை கொழும்புக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமையக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு!
அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கைக்கான தனது விஜயத்தின் போது, உள்நாட்டு எதிர்பார்ப்புகளுக்கு தன்னிச்சையான வகையில் தலையிடக் கூடாது என சீன தூதரகம் அறிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி ஏனைய நாடுகளின் உள்ளக மற்றும் வெளியுறவு விவகாரங்களில் தன்னிச்சையான தலையீடுகளை மேற்கொள்ளும் அருவருக்கத்தக்க போக்கை அமெரிக்கா மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு மைக் பொம்பியோ நேற்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.
இந்தநிலையில் அவரின் இலங்கை விஜயம் குறித்து இலங்கைக்கான சீன தூதரகம் விசேட அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.
அதில் பொம்பியோவின் இலங்கை விஜயத்தின் போது வீதி கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யுமாறு கோருவது இந்த நாட்டின் கௌரவத்தை பாதிக்கும் செயலாக அமையாதா என்று சீனா கேள்வி எழுப்பியுள்ளது.
ஒட்டு மொத்தத்தில் எவ்வாறாயினும், இலங்கையானது வௌிநாட்டு உறவுகளை தேவையறிந்து தெரிவு செய்ய வேண்டும் என்று அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பிரதி ராஜாங்க செயலாளர் டீன் தொம்சன் விடுத்துள்ள அறிவித்தல், சீன – இலங்கை ராஜதந்திர உறவை பாதிக்கும் செயல் என சீனா சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை விஜயத்தால் சீனா ஆட்டங் கண்டுள்ளமை குறிப்பிடத் தக்கது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.