பழைய பொய்களை திரும்பத் திரும்பக் கூற வேண்டாம் என்றும், இந்தியாவுடனான எல்லை விவகாரம் இருநாடுகள் சம்பந்தபட்ட இருதரப்பு விவகாரம் என்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவுக்கு சீனா பதில் அளித்துள்ளது.
இந்தியாவிற்கான பயணத்தின் போது, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் மைக் பொம்பியோ கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது பேசிய அவர், “இந்திய மக்களின் இறையாண்மைக்கும் சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, அமெரிக்கா இந்திய மக்களுக்கு ஆதரவாக இருக்கும். சீனா ஜனநாயகத்தின் நண்பன் அல்ல, சட்டத்துக்கும் கட்டுப்பட்டதல்ல, வெளிப்படைத்தன்மை, சுதந்திரம் ஆகியவற்றுக்கு எதிரானது.” என்றார்.
அவரின் இந்தக் கருத்துக் தொடர்பில் கடுமையான அறிக்கையினை சீன தூதரகம் வெளியிட்டுள்ளது. அத்தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இருதரப்பு உறவுகளைக் கட்டமைப்பது பிராந்திய அமைதி ஸ்திரத்தன்மை, மற்றும் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்பதையே சீனா பரிந்துரைத்து வருகிறது. பிறரின் நியாயமான உரிமைகள் விவகாரத்தில் தலையீடு கூடாது.
எல்லை விவகாரம் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான இருதரப்பு உறவு. இருதரப்புகளும் எல்லைப்பகுதியில் படைகளை திரும்பப் பெற்று பதற்றத்தை தணிக்க பேச்சு வார்த்தைகளில் இருந்து வருகிறது. சீனாவும் இந்தியாவும் தங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் களையும் அறிவும் திறமையும் கொண்டது. இதில் 3ம் நாடு தலையிட இடமில்லை.
கோவிட் 19 விவகாரம் : கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை சீன மக்கள் மற்றும் வரலாற்றின் தெரிவு. இந்த ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் சீன மக்கள் வைரஸுக்கு எதிரான போரில் வென்றுள்ளனர்.
இதனையடுத்து சீன கம்யூனிஸ்ட் கட்சி மீதான சீன மக்களின் நம்பகத்தன்மை 90%ஐயும் கடந்திருப்பதாக பன்னாட்டு திறன் ஆய்வுகள் பல ஆய்வு தகவல்களை வெளியிட்டு உறுதி செய்துள்ளன. எனவே சீன கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிப்பவர்கள் சீன மக்களுக்கு எதிர் நிலையில் தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள்.
அமெரிக்கா இன்னமும் கொரோனா குறித்து சீனாவை குறை கூறிவருகிறது. அது உண்மைகளை திரித்து மக்களைத் திசைத்திருப்புகிறது. வைரஸுக்கு எதிராக சீனாவின் நடவடிக்கைகள் அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடியதே.
அமெரிக்கா தங்கள் செயல்பாடுகளில் கவனம் செலுத்தி கொரோனாவிலிருந்து மக்களை மீட்கட்டும், பிறரை குறைகூறுவதை நிறுத்தட்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.