ஜேம்ஸ்பொண்ட் திரைப்படமான ‘மேன் வித் தி கோல்டன் கன்’ என்றபடத்தில் ஒரு காட்சி வரும். அதில் வில்லன் தப்பிச் செல்வதற்காக பயன்படுத்தும் கார், திடீரென வானில் பறக்கும். திரைப்படத்தில் சாத்தியமானதை தற்போது உண்மையில் சாத்தியமாக்கி உள்ளது சுலோவோகியாவைச் சேர்ந்த கிளெய்ன் விஷன் நிறுவனம்.
இந்நிறுவனம் வடிவமைத்துள்ள ஸ்போர்ட்ஸ் கார் ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் விமானமாக மாறி 1,500 அடி உயரம் பறந்து சாதனை புரிந்துள்ளது. இந்நிறுவனம் வடிவமைத்துள்ள எயார் கார் எனும் ஸ்போர்ட்ஸ் கார் தொடர்ந்து 1,000 கி.மீ. தூரம் பறக்கும் திறன் கொண்டது. வான்வெளி கணக்கின்படி இது 620 மைல் ஆகும். இந்த ஸ்போர்ட்ஸ் காரில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 1.61 இன்ஜின் உள்ளது.
இந்தக் காரில் பல்வேறு பகுதிகள் உள்ளன. மடக்கும் வகையிலான இறக்கை, அதேபோன்று வால் பகுதி, பரசூட், விமானம் போன்ற வடிவமைப்பு, பயணிகளுக்கான இருக்கை வசதி உட்பட அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன. சோதனை ஓட்டம் சுலோவாகியாவில் உள்ள பியஸ்டனி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது. வர்த்தக ரீதியில் இத்தகைய ஸ்போர்ட்ஸ் கார் விமானம் அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.