ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் மோசடி செய்திருக்கிறார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாங்கள் அணுக உள்ளோம் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாங்கள் இந்தத் தேர்தலில் வெற்றிபெறப் போகிறோம். வெளிப்படையாகவே நாம் வெற்றி பெறுவோம். நாட்டின் நன்மைக்காக ஒருமைப்பாட்டை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள்.
பைடன் ஜனாதிபதி தேர்தலில் மோசடி செய்திருக்கிறார். சட்டத்தைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே, நாங்கள் அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ட்ரம்ப் தனது ருவிட்டர் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
அதில், “இது மிகப்பெரிய வெற்றி. ஆனால், அவர்கள் அந்த வெற்றியைத் திருட நினைக்கிறார்கள். நான் இன்று இரவு அறிக்கையை வெளியிட இருக்கிறேன். நாம் அவர்களை அவ்வாறு செய்யவிடக் கூடாது. தேர்தல் முடிந்த பிறகு வாக்களிக்க முடியாது” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஒக்லஹாமா, கென்டகி, இன்டியானா, அர்கஜ்சாஸ், டென்னிசீ, வெஸ்ட் விர்ஜினியா, புளோரிடா ஆகிய மாகாணங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். நியூயோர்க், மேரிலாண்ட், மாசாசுசெட்ஸ், வெர்மாண்ட், நியூஜெர்ஸி ஆகிய மாகாணங்களில் பைடன் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
முக்கிய மாகாணங்களான ஒஹையோ, புளோரிடாவில் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். பல மாகாணங்களில் ஜோ பைடன் முன்னிலை வகித்தாலும், ட்ரம்ப் தொடர்ந்து கடும் போட்டியைக் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தபால் வாக்குகளை எண்ணும் பட்சத்தில் முடிவும் ஜோ பைடனுக்கே சாதகமாக அமையும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.