நடிகை காஜல் அகர்வால் கௌதம் என்பவரை மணந்தார். திருமண புகைப்படங்களைத் தொடர்ந்து காஜல் அகர்வால் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வந்தார்.
இதனிடையில், கரோனா நெருக்கடி பற்றிய பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், இது சற்று தாமதமானது என்று எனக்குத் தெரியும். இதை நான் முன்னரே செய்திருக்க வேண்டும். இதை நான் இந்தக் கடிதத்தின் மூலமாக, ஒட்டுமொத்த உலகின் முன்பு செய்வதற்கு மன்னிப்புக் கேட்கிறேன்.
ஆனால் எனது உணர்வுகளை வெளிப்படுத்த இதுதான் எளிமையான வழி. பின்னர் வருத்தப்படுவதை விட கடைசி நிமிடத்தில் வேண்டாம் என்று மறுப்பது நல்லது.
ஒரு சிறிய கிருமி, இந்த உலகை நான் பார்க்கும் விதத்தை மொத்தமாக மாற்றும் என்று கற்பனை கூட செய்து பார்க்கவில்லை.
கண்ணுக்குத் தெரியாத ஒரு எதிரியுடன் சண்டையிட்டு, கண்ணுக்கெட்டிய தூரம் வரை சரியான சிகிச்சை எதுவும் இல்லாத, என்னைச் சுற்றியிருக்கும் உலகம் அச்சத்தால் சூழப்பட்டிருக்கும் நிலை, நான் வாழ்க்கையை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை மறுபரிசீலனை செய்ய வைத்துவிட்டது.
என்னைப் பற்றியும் இந்த உலகத்தைப் பற்றியும் நான் நினைத்து வைத்திருக்கும் பல விஷயங்களுக்கு சவால் விடுத்துள்ளது.
தற்போது நாம் வாழும் இந்த நிலைக்கு நான் பெரிதாக மறுக்கிறேன். தொடர்ந்து நிலவும் நிச்சயமற்ற, அச்சமான சூழலை மறுக்கிறேன். கிருமிக்கு நமது தற்போதைய பதிலடியையும், நம்மிடம் இருக்கும் சுகாதார அளவுகோல்களையும் நான் மறுக்கிறேன்.
நெருக்கடி ஆரம்பித்த 11வது மாதத்தில், நானும் மற்றவர்களும் ஒரு நல்ல பாதுகாப்போடு தயாராகியிருக்க வேண்டும். வெளியே செல்லும் போது நாம் அனைவரும் பயமின்றி செல்ல வேண்டும். இந்த கிருமிக்கு சரியான பதிலடி கொடுக்க தயார் நிலையில் இருந்திருக்க வேண்டும்.
இந்த நெருக்கடிக்கு உடனடியான, இதுவரை இல்லாத ஒரு நடவடிக்கையை நாம் எடுக்க வேண்டும். நாம் இன்று எடுக்கும் முடிவுகள் தான் வரப்போகும் பல நூறு வருட எதிர்காலத்தை வடிவமைக்கும்.
ஆம், நான் சற்று நாடகத்தனமாகப் பேசுகிறேன். ஆனால் எனது எண்ணங்களை உங்கள் அனைவருடனும் நான் பகிர வேண்டும். என் வாழ்க்கையின் புதிய கட்டத்தை நான் ஆர்வத்தோடு எதிர்நோக்கும் நேரத்தில், நான் வாழ்ந்த முறைகளை உடைத்து வெளியேறுகிறேன்.
பாதுகாப்பான உலகம் மட்டுமே என் தேவை, அதற்குக் குறைவாக எதையும் நான் ஏற்க மறுக்கிறேன். என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் காஜல் அகர்வால்.