தனது விடுதலை தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் யார் விவரம் கேட்டாலும் கொடுக்க கூடாது என்று கோரிய சசிகலாவின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களுரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சசிகலாவின் தண்டனை காலம் அடுத்தாண்டு முடியும் நிலையில், முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியது.
இது தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி, பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு கொடுத்த மனுவில், சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார், முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பு உள்ளதா? சிறையில் இதுவரை சசிகலாவை யார் யாரை சந்தித்து பேசியுள்ளார்’ என்பது உள்பட பல விவரங்கள் கேட்டிருந்தார். அதற்கு சிறை நிர்வாகம் பதிலளித்து வந்தது.
இந்நிலையில் சசிகலா, எனது விடுதலை உள்பட எந்த விவரங்களையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் யார் கேட்டாலும் கொடுக்க கூடாது.
இது தனி மனித உரிமை மீறலாக இருக்கும் என்பதால், எனது கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று கடந்த செப்டம்பரில் பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளருக்கு மனு கொடுத்திருந்தார்.
இந்த மனுவை ஏற்க கூடாது என்று சமூக ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தியும், சிறை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் சசிகலா கொடுத்த மனுவை சிறை நிர்வாகம் நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக டி.நரசிம்மமூர்த்தி கூறுகையில், சசிகலாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் தண்டனை பெற்றுள்ளதால் சசிகலாவுக்கு விடுமுறை நாட்கள் என்பது பொருந்தாது.
மேலும் அவர் பரோல் மூலமாக சென்ற நாட்களையும் கூடுதலாக சிறைவாசம் அனுபவிக்க வேண்டும். அவர் முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பே இல்லை என கூறியுள்ளார்.