அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளிவரும் நிலையில், தொடர்ந்து பின்னடைவை சந்தித்துவரும் டொனால்டு டிரம்ப் இன்னொரு மோசமான பட்டியலில் இணையவிருக்கிறார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் ஜனநாயக கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை ஜனாதிபதியுமான ஜோ பைடன் 264 தேர்தல் சபை வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.
பெரும்பாண்மை இலக்கமான 270-க்கு இன்னும் 6 வாக்குகளே தேவை என்ற நிலையில் ஜோ பைடன் வெற்றிக்கு மிக அருகாமையில் உள்ளார்.
ஆனால் இன்னும் மூன்று மாகாணங்களில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முன்னிலையில் இருந்தாலும், அவரால் இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்க முடியாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 1789 முதல் ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த தேர்தலில் 1856 முதல் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள் ஆதிக்கம் செலுத்த தொடங்கின.
தொடர்ச்சியாக இந்த இரண்டு கட்சிகளின் வேட்பாளர்கள் தான் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதிக்கான அரியணையை அலங்கரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
கருத்து கணிப்புகளின் படி அவரது கொரோனா கால செயல்பாட்டினால் டிரம்ப் இந்த தேர்தலில் தோல்வியை தழுவ வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.
அந்த வகையில் ஜனாதிபதி பதவியில் இருந்து தேர்தலை எதிர்கொண்டு தோல்வியை தழுவிய முன்னாள் ஜனாதிபதிகளான ஜான் ஆடம்ஸ், ஜான் குயின்சி ஆடம்ஸ், மார்ட்டின் வான் புரன், குரோவர் கிளீவ்லேண்ட், பெஞ்சமின் ஹாரிசன், வில்லியம் மெக்கின்லி, ஹெர்பர்ட் ஹூவர், ஜெரால்ட் ஃபோர்டு, ஜிம்மி கார்ட்டர், ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் வரிசையில் டிரம்பும் இணையலாம்.
அதே வேளை 1993 தேர்தல் முதல் ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் தொடர்ந்து இரண்டு முறை அந்த பதவியில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.