கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட அதிக அளவிலான மக்கள் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளது பெருமையாக இருப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளன. இனி மூன்று மாகாணங்களில் மட்டும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைய வேண்டும்.
தேர்தலில் வெற்றி பெற 270 பிரதிநிதிகள் வாக்கு தேவை என்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 264 வாக்குகளும், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 214 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை முடிவு செய்யும் மாகாணங்களாக கருதப்பட்ட மிச்சிகன், விஸ்கான்சின் ஆகியவற்றில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.
அதே வேளை வடக்கு கரோலினா, பென்னிசில்வேனியா, ஜியார்ஜியா ஆகிய மாகாணங்களில் ஜனாதிபதி டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.
இருப்பினும், இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் வாய்ப்பு அவருக்கு இல்லை என்றே தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் டெலாவேர் மாகாணத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் தங்களது கட்சியின் ஆதரவாளர்களை சந்தித்துள்ளனர்.
அப்போது பேசிய ஜோ பைடன், தேர்தல் முடிவுகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. நாம் வெற்றி பெற்று விட்டோம் என்பதை அறிவிப்பதற்காகவும் நான் தற்போது வரவில்லை.
ஆனால் நாம் இந்த தேர்தலில் வெற்றியை நெருங்கிவிட்டோம். ஓவ்வொரு வாக்குகளும் எண்ணப்படும் வரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.
கடந்த 2 நூற்றாண்டுகளாக அமெரிக்கா ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது.
இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட, வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான மக்கள் தேர்தலில் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர்.
இதன்மூலம் அமெரிக்காவின் இதயத்துடிப்பு ஜனநாயகம் என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தெரிவானதாக தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னரே ஜனாதிபதி டிரம்ப் தமது ஆதரவாளர்களிடம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.