சர்வதேசத்தில் இருக்கின்ற அத்தனை நாடுகளும் விடுதலைப் புலிகள் மீதான தடைகளை நீக்கி உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் நா.விஸ்ணுகாந்தன் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இன்றைய காலகட்டத்தில் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் விடயம் இலங்கையில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையேற்படவேண்டும் என்பதாகும்.
கடந்த வாரம் லண்டனில் புலிகள் மீதான தடைநீக்கப்பட்டதான செய்திவந்தது. அந்த தடையினை லண்டன் மட்டுமன்றி தடைசெய்யப்பட்டுள்ள அனைத்து நாடுகளும் நீக்கவேண்டும்.
யுத்தம் முடிந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களின் மனதில் அதன் வடு காணப்படுகின்றது. விடுதலைப் புலிகள் என்பது ஒட்டுமொத்த தமிழர்களையும் சார்கின்றது.
யுத்தகாலங்களில் ஒட்டுமொத்த தமிழர்களையும் புலிகளாக பார்த்த காலமாகும். இன்று இந்த நாட்டில் நிம்மதியாகவும் மூன்று இனங்களுடன் ஒன்றுபட்டுவாழும் சூழ்நிலை ஏற்பட்டுவருகின்றது.
இவ்வாறான காலகட்டத்தில் ஏறாவூரில் உள்ள சில முஸ்லிம் நபர்கள் விடுதலைப் புலிகள் மீதான தடைநீக்கப்படக்கூடாது, ஏனைய நாடுகளிலும் தடைநீக்ககூடாது என போராட்டம் நடாத்தி பிரதேச செயலாளருக்கு மனுவொன்றை கொடுத்துள்ளனர்.
இது மிகவும் முட்டாள்தனமாக செயற்பாடாகும். விடுதலைப்புலிகள் உருவாக்கப்பட்ட காலத்தில் முஸ்லிம்களும் இணைந்து ஆயுதப்போராட்டங்களை நடாத்தினர்.
காலப்போக்கில் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டு தமிழர்களை சிதைப்பதில் பெரும்பங்காற்றினார்கள். இந்த நாட்டில் இறைமைக்கும் அமைதிக்கும் தமிழ் மக்கள் எந்த செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை.
1971ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜே.வி.பி.யினர் போராட்டங்களை நடாத்தினார்கள். பல யுத்தங்கள் நடைபெற்றது. விடுதலைப் புலிகளின் போராட்டம் ஒரு இனரீதியான போராட்டமாகயிருந்தது.
கடந்த காலத்தில் இருந்த தமிழர்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. இந்த நாட்டில் மூன்று இனமக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும். உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழும் சூழ்நிலை ஏற்படுத்திக்கொடுக்கப்படவேண்டும்.
அதனால் விடுதலைப்புலிகள் மீது உலகம் முழுவதுமுள்ள தடைகள் நீக்கப்படவேண்டும். இந்த நாட்டின் ஜனாதிபதி தமிழர்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றினை பூர்த்திசெய்யவேண்டும்.
இந்த இரண்டு வருடத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 84 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நாட்டில் தமிழர்கள் நிம்மதியாக வாழவேண்டுமானால் இவ்வாறானவர்களின் பிரச்சினைகள் ஆராயப்பட்டு தீர்வினை வழங்கவேண்டும்.
சர்வதேசத்தில் இருக்கின்ற அத்தனை நாடுகளும் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைகளை நீக்கி உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். இதுகுறித்து தமிழ் அரசியல்வாதிகள் இன்று பேசுவதற்கு தயங்குகின்றனர்.
ஜே.வி.பி. இந்த நாட்டில் யுத்தம் செய்தபோதும் இன்று அதன் தலைவர்கள் தங்களது பிள்ளைகளுடன் கட்சிகள் அமைத்து நிம்மதியாக வாழும் சூழ்நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, கட்சி அமைத்து வாழும் நிலையில் தமிழர்களுக்கு நிரந்தரமான தீர்வும், சுதந்திரமும் இந்த நாட்டில் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமாகவிருந்தால் சர்வதேசத்தில் உள்ள தடைகள் உடைக்கப்படவேண்டும்.
மட்டக்ளப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இதுவரை காலமும் நடைபெறவில்லை. மற்றைய மாவட்டங்களில் இரண்டு கூட்டங்கள் நடைபெற்று முடிந்ததாக நாங்கள் அறிகின்றோம்.
இந்த நிலை தொடருமானால் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவிருக்கின்ற வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டமானது பாரிய பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படும் என்பதை மறந்துவிடக்கூடாது.
சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அவர் அந்தக் கூட்டத்திற்கு சமூகமளிக்காத காரணத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் பேசப்படாமலிருக்கின்றது.
விவசாயம், கல்வி, சுகாதாரம் என ஒவ்வொரு துறையிலும் மாவட்டத்தின் தேவைகளை இவர்கள் ஒவ்வொன்றாக இனங்கண்டு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் தீர்மானமெடுத்து அனுப்பினால்தான் மாவட்டத்தின் அபிவிருத்திக்கான நிதிகள் ஒதுக்கப்படும்.
இந்தக் கூட்டம் நடைபெறாமல் போனால் மாவட்டத்தினுடைய நிலைமை என்ன? உடனடியாக ஜனாதிபதி, பிரதமர் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரை மாற்றுங்கள் என்பதாகும்.
பாராளுமன்றத்தில் இன்று உங்களுடன் இணைந்தவர்கள் இருக்கின்றார்கள், 20வது திருத்தச் சட்டத்தோடு இணைந்தவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் யாருக்காவது அத்தலைவர் பதவியை வழங்கி உடனடியாக மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை நடத்துங்கள்.
கொரோனாவும் வந்துவிட்டது. கொரோனா காலத்தில் என்னசெய்யப் போகின்றார்கள், கொரோனாவிற்குப் பின்னர் என்னசெய்யப் போகின்றார்கள் என்பது தெரியாது.
மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் பிள்ளையான் அவர்கள் தனது செயலாளராக மங்களேஸ்வரி அவர்களை நியமித்திருக்கின்றார், மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்தான் அங்கு நடைபெறுகின்றதென மக்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் அங்கு நடப்பது மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் அல்ல. கொரோனா சம்பந்தமான கூட்டமாகும். மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தினை உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் இந்த மாவட்டம் பின்தள்ளப்படும். பிள்ளையான் வரும்வரை காத்திருக்க முடியாது. யுத்தத்திற்குப் பின்னர் அபிவிருத்தி குறைவாக காணப்படுகின்ற மாவட்டம் எமது மாவட்டமாகும்.
இங்கு அதிகமான விதவைகள் இருக்கின்றார்கள். பொருளாதாரத்தில் எங்களுடைய மாவட்டம் பின்தங்கியிருக்கின்றது.
ஆகையால் வரவிருக்கின்ற வரவு செலவுத்திட்டத்தில் எமது மாவட்டத்திற்கு அதிகளவான நிதி ஒதுக்கப்படுமானால் இங்கு பாரிய அபிவிருத்திகள் நடைபெறும்.
இங்கு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படலாம். கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் பெரியளவான அபிவிருத்திகள் நடைபெறலாம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.