கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை புதைக்கும் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் சார்பான விளக்கம் வெளியிடப்பட வேண்டுமென பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
இன்று நாட்டுக்குள் அதிக பேசுபொருளாக கொரோனா விவகாரம் மாற்றமடைந்துள்ளது. இந்த நிலையில், இந்த வைரஸினால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் உடல்களை எரிப்பதா – புதைப்பதா எனும் வாதமும் இடம்பெற்று வருகிறது.
அத்தோடு, இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நாம் கடந்த காலங்களில் பல முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்திருந்தோம்.
எனினும், கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, இதனை அந்த அரசாங்கம் கவனத்தில் எடுக்கவில்லை. எம்மீது தான் குற்றஞ்சாட்டினார்கள்.
முஸ்லிம் வாக்குகளை சிதறடிக்க நாம் முயற்சிப்பதாகக் கூறினார்கள். இன்று அண்ணன் செய்த தவறையே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் செய்துள்ளார். உடல்களை புதைப்பதா – எரிப்பதா என்பதல்ல எமது பிரச்சினை.
உலக சுகாதார ஸ்தாபனம் விடுக்கும் வேண்டுகோளுக்கு இணங்கவே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எனினும், கொரோனாவை ஒழிக்க யாரிடமும் ஒரு தெளிவான நிலைப்பாடு இல்லை. கொரோனா வைரஸ் எதனால் உருவானது என்பது குறித்து கூட யாருக்கும் தெளிவில்லை.
இந்த நிலைப்பாடு நாட்டுக்கு நாடு மாற்றமடைகிறது. எமது நாட்டில் ஒரு சட்டம் தான் இருக்க வேண்டும். எமது நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்த நபர்களை எந்தக் காரணம் கொண்டும், புதைக்கக்கூடாது என்று சுகாதார அமைச்சினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
உடல்களை புதைப்பதால், நீர் மாசுபடுகிறது என்று எச்சரிக்கையும் கடந்த காலங்களில் விடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான், முஸ்லிம்களின் உடல்களை புதைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கம் இந்த விடயத்தில் நாடகமொன்றைதான் அறங்கேற்றி வருகிறது. அரசாங்கம் சார்பாக இதற்கான விளக்கம் வெளியிடப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்