மினுவாங்கொடை கொத்தணியில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மிகக்குறைந்தளவானோரே தற்போது இனங்காணப்படுகின்றனர். மினுவாங்கொடை கொத்தணி நிறைவடையக் கூடிய நிலையிலேயே உள்ளது என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
தற்போது பேலிகிலயகொடை கொத்தணியே நாடளாவிய ரீதியில் பரவியுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளி
நடமாடும் சேவை மூலம் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதற்காக ஒரு சில தரப்பினருக்கு மாத்திரமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
குருணாகல் மற்றும் குளியாபிட்டி ஆகிய பகுதிகளில் சில கிராம சேவகர் பிரிவுகள் அச்சுறுத்தல் மிக்கவையாகவுள்ளன.
அங்குள்ளவர்களிடமிருந்தே ஏனையோருக்கு வைரஸ் பரவக்கூடிய வாய்ப்பு அதிகமாகவுள்ளது. எனவே தான் அந்த பகுதிகள் மாத்திரம் தனிமைப்படுத்தப்பட்ட ஏனைய பகுதிகள் திறக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது நாட்டை முழுமையாக முடக்குவது இலகுவானது. ஆனால் அவ்வாறு செய்தால் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியாது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே தான் அபாயமுடைய பகுதிகள் மாத்திரம் தனிமைப்படுத்தப்பட்டு ஏனைய பிரதேசங்களில் வழமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அத்தோடு கொரோனா தொற்றாளர்கள் தொடர்பிலும் மரணங்கள் தொடர்பிலும் தகவல்கள் உடனுக்குடன் வெளிப்படுத்தப்படுகின்றன. எவையும் மறைக்கப்படவில்லை.
எவ்வாறிருப்பினும் தொடர்ந்தும் அனைவரையும் அடிப்படை சுகாதார விதிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறு மாத்திரமே கோருகின்றோம்.
அரசாங்கம் உள்ளிட்ட ஏனைய துறைகள் அனைத்தும் கொவிட் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தவில்லை என்றார்.