மைத்திரிபால சிறிசேன காலத்தில் வடக்கு மாகாண ஆளுநராக,இருந்த போது அரசியல் கைதிகளின் விடுதலையை செய்யாதவர் தற்போது அதைப் பற்றி பேசுவது தமிழ் மக்களை ஏமாற்றும் வேலை என வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
சுரேன் ராகவன் வடக்கு மாகாண ஆளுநராக இருந்தவர். இப்பொழுது பல விடயங்கள் பேசுகின்றார். குறிப்பாக அரசியல் கைதிகளின் விடுதலை பற்றிப் பேசுகின்றார். நீதி அமைச்சரை கேள்வி கேட்கின்றார்.
அவர் இதையெல்லாம் வடக்கு ஆளுநராக இருக்கின்ற பொழுது மட்டுமல்ல அவர் மைத்திரிபால சிறிசேனவினுடைய முகவராக இருந்துவிட்டு, இப்போது அதைப் பற்றி இன்னொரு ஆட்சி வந்த பிறகு பேசுவது தமிழ் மக்களை ஒரு வகையில் ஏமாற்றும் வேலையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
அரசியல் கைதிகள் விடுதலை பற்றி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவர் பேசலாம். ஆனால் எங்களுடைய வடக்கு, கிழக்கு சார்ந்த தமிழ் தேசியம் சார்ந்த அரசியல்வாதிகளுடைய செயற்பாட்டை விமர்சிப்பதற்கு எந்தவித உரிமையும் கிடையாது. அவர் அவ்வாறு பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவர் தமிழர் என்பதால் அவர் மீது மக்கள் வைத்துள்ள மதிப்பினை அவர் குறைத்துக் கொள்ளக்கூடாது என்றார்.