தெற்கு சீனாவின் மாவட்டம் ஒன்றில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நாய்களுடன் தெருவில் நடமாட தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது அங்குள்ள நிர்வாகம்.
மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையை மூன்று முறை மீறும் உரிமையாளர்களின் நாய்களை பொலிசார் கொல்வார்கள் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த அதிரடி உத்தரவானது உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் இந்த இரக்கமற்ற உத்தரவு பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த உத்தரவு இன்னும் அமுலுக்கு கொண்டுவரவில்லை எனவும், பரிசீலனையில் மட்டுமே உள்ளது என அதிகாரிகள் தரப்பு தற்போது விளக்கமளித்துள்ளது.
மேலும், மக்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்வதே அந்த விதிகள் நோக்கமாகக் கொண்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள வெய்சின் மாவட்ட நிர்வாகத்தால் வெள்ளிக்கிழமை இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் எங்கேனும் ஒரு முக்கிய பகுதியில் நாயுடன் அதன் உரிமையாளர் நடமாடுவது அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டால், முதல் தடவை எச்சரிக்கப்படும் எனவும்,
அதே நபர் இரண்டாவது முறையும் விதிகளை மீறினால் சுமார் 23 பவுண்டுகள் பிழை விதிக்கப்படும் எனவும்,
மூன்றாவது முறை அதே நபர் நாயுடன் தெருவில் நடமாடுவது அறிய வந்தால், பொலிசார் அந்த நாயை கொல்வார்கள் என்றே விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், நவம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் நாய் உரிமையாளர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.