சிறுமியின் கல்லீரலை சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் 7 வயது சிறுமி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
கல்லீரல் உள்ளிட்ட உள் உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.
கொடூர கொலைக்கு முன்னர் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு இரையாக்க முயன்றதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
நாட்டை உலுக்கிய இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை நால்வரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல ஆண்டுகளாக பிள்ளைகள் இல்லாத தம்பதி ஒன்று, கல்லீரலை உணவாக்கினால் குழந்தை உருவாகும் என்ற மூட நம்பிக்கையால் இந்த கொடூரத்தை அரங்கேற்றியதாக தெரிய வந்துள்ளது.
கல்லீரலுக்காக 2 பேர் கொண்ட ஒரு கும்பலுக்கு முன்பணமாக இவர்கள் ஆயிரம் ரூபாய் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
கல்லீரல் கிடைத்த பின்னர், அது தொடர்பான சடங்கு ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை மாலை நேரம், குடியிருப்புக்கு அருகே தோழிகளுடன் விளையாட்டில் ஈடுபட்டிருந்த சிறுமி மாயாமாகியுள்ளார்.
ஆனால் ஞாயிறன்று பகல் சிறுமியின் சடலத்தை கிராம மக்கள் கண்டெடுத்துள்ளனர்.
மட்டுமின்றி, அப்போது சிறுமியின் வயிறு பிளந்திருந்ததாகவும், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் காணப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே சிறுமியின் அண்டைவீட்டாரான அங்குல் மற்றும் பீரான் ஆகியோரை விசாரணை செய்த பொலிசார்,
இறுதியில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளனர். அங்குல் என்பவரின் உறவினரே கல்லீரலுக்காக பணம் அளித்ததாகவும் அவர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
சிறுமியை கடத்திச் சென்ற இருவரும், இரவில் மது அருந்திய பின்னர், சிறுமியிடம் அத்துமீற முயன்றுள்ளனர்.
பின்னர் சிறுமியை கொன்று கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளை அப்புறப்படுத்தி, அந்த தம்பதியிடம் ஒப்படைத்துள்ளனர்.
1999-ல் திருமணம் செய்து கொண்ட அந்த தம்பதிக்கு இதுவரை பிள்ளைகள் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில், உறுதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.