பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது 75ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகின்றார்.
இந்த நிலையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இன்றையதினம் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இதேவேளை, பிரதமரின் பிறந்ததினத்தை முன்னிட்டு தாய்மார்களுக்கு தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வொன்று இன்று முற்பகல் நாராஹேன்பிட்ட அபயராம புரான விகாரையில் இடம்பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெறும் இந்த தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வு நாராஹேன்பிட அபயராமாதிபதி, மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரினால் ஏற்பாடு செய்யப்படும்.
முதலில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர், மரியாதைக்குரிய மஹா சங்கத்தினரின் ஜய பிரித் பாராயணத்திற்கு மத்தியில் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து 76 தாய்மார்களுக்கு தானம் வழங்கப்பட்டது.
இதன்போது பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான காமினி லொகுகே, பவித்ரா வன்னி ஆராச்சி, பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான பியல் நிஷாந்த, சிறிபால கம்லத், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.